கரியும், கோதுமையும்

இந்திய நிலக்கரி நிறுவனம், அனல் மின்நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரி பற்றாக்குறையை இறக்குமதி மூலம் சமாளித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது...
Updated on
2 min read

இந்திய நிலக்கரி நிறுவனம், அனல் மின்நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரி பற்றாக்குறையை இறக்குமதி மூலம் சமாளித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது "மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு'. இதன் மூலம் நிச்சயமாக மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்குக் குறைந்தது 15 காசுகள் உயரக்கூடும் - உடனடியாக அல்ல - என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லாமல் இருந்திருந்தால், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க வயல்கள் செயல்படத் தொடங்கியிருந்தால் நிலக்கரி உற்பத்தி அதிகரித்திருக்கும். நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு அம்பலமானதால், சுமார் 89 நிலக்கரிச் சுரங்க வயல்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இனி இந்த நிலக்கரி வயல்களுக்கான ஏலம் எப்போது நடைபெறும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை, அடுத்த ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு மறுஒதுக்கீடுகள் நடைபெறலாம்.

இந்திய நிலக்கரியின் எரிதிறன் குறைவு, சாம்பல் அதிகம் என்று சொல்லப்பட்டாலும்கூட, அதிக நிலக்கரி உள்நாட்டிலேயே கிடைக்கும்போது, இறக்குமதி செய்வதற்கான தேவை இருந்திருக்காது. ஆனால் இப்போது நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக மாறுகிறது. இதற்குக் காரணம், மத்திய அரசின் தவறான முடிவுகள்தான். அரசு செய்யும் தவறுகளின் சுமையை மக்கள் பரவலாக ஏற்றுக்கொண்டாக வேண்டியிருக்கிறது.

2015, மார்ச் மாதம் முதல் 78,000 மெகாவாட் மின்உற்பத்தி இலக்கினை முன்வைத்து, தேவைப்படும் நிலக்கரிக்கு இப்போதே ஒப்பந்தங்கள் போட இந்திய நிலக்கரிக் கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய நிலக்கரிக் கழகத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் முறையே 65%, 67%, 75% அளவுக்குத்தான் உள்நாட்டு தேவைக்கான நிலக்கரியை வழங்க முடியும். பற்றாக்குறையைச் சமாளிக்க இறக்குமதி செய்வதைத் தவிர வேறு வழியே கிடையாது.

சர்வதேசச் சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனா போன்று பல ஆண்டுகளின் தேவைக்கு வெளிநாடுகளில் நிலக்கரி வயல்களை முன்னதாகவே குத்தகைக்கு எடுப்பதோ அல்லது முன்பதிவு செய்துகொள்வதோ இந்திய நிலக்கரிக் கழகத்துக்கு சாத்தியமில்லை.

அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்யும்போது அனல் மின்நிலையங்களின் மின்உற்பத்திச் செலவு அதிகரிக்கும். ஆகவே மின்சாரத்தின் விலையை அவர்கள் உயர்த்துவார்கள். அதனை வாங்கி மக்களுக்கு விநியோகம் செய்யும் அரசு, இந்த விலையேற்றத்தை மின்கட்டணத்தில் உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.

பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட அனல் மின்நிலையம் நிலக்கரி இல்லாததால் செயல்படாமல் இருப்பதைக் காட்டிலும், அதிக விலையில் நிலக்கரியை வாங்கி மின்உற்பத்தி செய்வது மேலானது. மின்சாரமே இல்லை என்பதைவிட, அதிக விலைக்கு மின்சாரம் கிடைப்பது மேலானது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது சரி....ஆனால் சரியல்ல!

காய்கறி போல அன்றாடம் விலை மாற்றம் இல்லாவிட்டாலும், பெட்ரோல், டீசல் போல மாதம்தோறும் மின்கட்டணத்தையும் நிலக்கரி விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் சூழ்நிலை உருவானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மின்சாரம், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயரும்போது மற்ற பொருள்களின் விலையும் பன்மடங்கு உயரும்.

அடுத்தது, 100 லட்சம் டன் கோதுமை அபரிமிதமாக உணவுக் கழகத்தில் தேங்கிக் கிடப்பதால் இவற்றைத் தனியாருக்கு - மொத்தக் கொள்முதல் செய்வோருக்கு விற்பனைச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 3 லட்சம் டன் முதல் 9 லட்சம் டன் வரை சில்லறை வியாபாரிகளுக்கு வழங்கப்படும். ஒரு குவிண்டால் ரூ.1,500-க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்தை விலையை ஒப்பிடும்போது இந்த விலை குறைவுதான். தற்போதைய சந்தை விலை ரூ.1,590 முதல் 1,690 வரை.

ஏற்கெனவே 45 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதியை, குறைந்தபட்ச விலையாக டன்னுக்கு 300 அமெரிக்க டாலர் என ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தரமான கோதுமையை ஏற்றுமதி செய்துவிட்டு, இந்திய உணவுக் கழக கோதுமையை வாங்கி இந்தியச் சந்தையில் "மதிப்பூட்டிய பொருள்களாக' விற்பனை செய்ய ஏதுவாக இந்த நடைமுறையை மத்திய அரசு கையாள்கிறது.

நியாயவிலைக் கடையில், அரசு மானியத்துடன், வறுமைக் கோட்டிற்கு மேலாக இருப்போருக்கு வழங்கப்படும் (10 கிலோ) கோதுமையின் விலை கிலோ ரூ.8.50. ஆனால் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் நியாயவிலைக் கடை கோதுமையை வாங்க மாட்டார்கள். ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.40 என்று வணிகஇலச்சினையில் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனங்கள் விற்பதைத்தான் வாங்குவார்கள். இந்த நிறுவனங்களுக்கென கோதுமை தனியாகவா விளைகிறது? இந்திய உணவுக் கழகம் விற்கும் 100 லட்சம் டன் கோதுமை "மதிப்பூட்டிய பொருளாக'ச் சந்தைக்கு வரப்போகிறது.

இந்திய மண்ணில் நிலக்கரி இருக்கிறது. ஆனால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை!

கோதுமை அபரிமிதமாக இருக்கிறது. ஆனாலும் கூடுதல் விலையில் வாங்க வேண்டிய நிலைமை!

இரவில் வாங்கினோம், விடியவே இல்லை - என்பது உண்மையிலும் உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com