தேவைதானா வேலைநிறுத்தம்?

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் 5 விழுக்காடு பங்குகளை விற்பதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜூலை 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருக்கின்றனர்.
Updated on
2 min read

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் 5 விழுக்காடு பங்குகளை விற்பதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜூலை 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருக்கின்றனர்.

இந்த 5 விழுக்காடு பங்குகளை தமிழக அரசின் நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கும்கூட சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யாருக்குமே விற்கக்கூடாது என்பதுதான் அவர்களது கொள்கை முடிவு.

தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தால் பாதிக்கப்படப்போவது தமிழ்நாடுதான். ஏற்கெனவே மின்பற்றாக்குறையால் திண்டாடிக்கொண்டிருக்கும் நாம், இந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக மேலும் மின்தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும் அவசியம். ஆனால், காலவரையற்ற வேலைநிறுத்தம் தேவைதானா?

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் 2012-13-ஆம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ.1,479 கோடி. அதாவது சென்ற ஆண்டைவிட 3.5% அதிகம். அப்படியிருந்தும் பங்குகளை விற்க வேண்டும் என்கின்ற முடிவு மத்திய அரசு மேற்கொள்ள காரணம் என்ன?

இந்தப் பிரச்னை திடீரென்று ஏற்பட்டுவிடவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் முன்பாக இந்தியப் பங்குகள் பரிவர்த்தனைக் கழகம் (செபி) விதித்துள்ள நிபந்தனையால் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பிரதமராக யார் இருந்தாலும், மத்திய அரசில் எந்தக் கட்சி அல்லது கூட்டணி இருந்தாலும், செபி விதிமுறைப்படி, நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் பங்குகளை விற்றே ஆக வேண்டும்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பொதுமக்களின் பங்குமூலதனம் இருந்தே ஆக வேண்டும் என்று செபி சொல்கிறது. தனியார் நிறுவனம் என்றால் பொதுமக்களின் பங்குமூலதனம் குறைந்தபட்சம் 25% ஆகவும், பொதுத்துறை நிறுவனங்கள் என்றால் குறைந்தபட்சம் 10% ஆகவும் இருக்க வேண்டும் என்றும் இந்த நிபந்தனை வரும் ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் செபி காலக்கெடு விதித்துள்ளது. இதனால்தான், மத்திய அரசு வேறு வழியின்றி நெய்வேலி நிலக்கரி கழகத்தின் பங்குகளை, மேலும் 5 விழுக்காடு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

செபியின் விதிமுறையும், மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்பதும் தொழிற்சங்கத்துக்குத் தெரிந்திருந்தும் இத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவதால் யாருக்கு லாபம்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக செபி விதித்த நிபந்தனைகளை எதிர்த்து போராட்டம் நடத்தி, செபி அந்த முடிவை விலக்கிக்கொள்ள வைத்திருக்க வேண்டிய அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இப்போது கடைசி நேரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது தமிழக மக்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டு மின்இணைப்புகள் மட்டுமின்றி தமிழக தொழிற்கூடங்களும் மின்தட்டுப்பாட்டால் பாதிப்படையும்.

இவ்வாறு, பொதுமக்களின் பங்குமூலதனம் 10% பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது நெய்வேலி நிலக்கரிக் கழகம் மட்டுமே அல்ல. மொத்தம் 12 பொதுத்துறை நிறுவனங்கள் இந்தச் சிக்கலில் இருக்கின்றன. 105 தனியார் நிறுவனங்களுக்கும் இதே சிக்கல். தனியார் நிறுவனங்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க செபி திட்டமிட்டுள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்படாமல் இருப்பது எங்ஙனம்?

இந்நிலையில், தமிழக அரசுக்கும்கூட பங்குகளை விற்கக்கூடாது என்று சில தொழிற்சங்கப் பிரிவுகள் கூறுவது எதனால் என்பது புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது சாத்தியமாகும் எனில், அது வரவேற்கத் தக்கது. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் 5% அல்ல 49% பங்குகளைக்கூட தமிழக அரசின் நிறுவனங்கள் பெறும் என்றால், நெய்வேலி நிலக்கரிக் கழத்தின் லாபத்தில் பங்கு பெறும் வாய்ப்பும், போனஸ் பெறும் வாய்ப்பும் தமிழகத்துக்குக் கிடைக்கும்.

ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடி நிகர லாபம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்தில் 49% பங்கு மூலதனம் பெற்றிருப்பது மிகப்பெரும் பலமாக இருக்குமே, அதை ஏன் எதிர்க்கிறார்கள்?

சனி, ஞாயிறுகளில் வீடுவந்து செல்லும் மத்திய அமைச்சர்கள், தமிழ்நாட்டுக்கு பங்குகளை விற்கத் தயார், மத்திய அரசு கொடுக்கத் தயார் என்றெல்லாம் பேட்டி அளித்துவிட்டுப் போகிறார்களே தவிர, இந்த விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டியவர் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர்தான். ஆனால், இருவரும் இந்தப் பிரச்னை குறித்து பேசாமல் இருந்து வருகின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸின் ஆதரவைக் கேட்டுப் பெற்ற திமுக இந்தப் பிரச்னையில் மத்திய ஆளும் கூட்டணியின் மீது தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் 5 சதவிகிதப் பங்குகளை தமிழ்நாட்டுக்கு விற்க வேண்டும் என்று வலியுறுத்தலாமே. அறிக்கை விடுவதால் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது?

பொதுத்துறை நிறுவனங்களாக டிட்கோ உள்ளிட்ட தமிழக நிறுவனங்கள், பங்கு மூலதனம் "வாங்குவதற்குத் தகுதியுடைய நிறுவனங்கள்' (Qualified Institutional Buyers) என்ற வரையறைக்குள் வருகின்றன என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாற்றுக் கருத்து இருக்குமேயானால், தமிழக முதல்வர் குறிப்பிடுவதைப்போல இந்நிறுவனங்களுக்கு விற்பது சட்டப்படி சாத்தியமில்லை என்றால் அதை மத்திய அரசும் செபியும் தெரிவிக்க வேண்டும். ஆனால், மெளனம் சாதிக்கிறார்கள்.

தேவையற்ற மெளனங்கள். தேவையில்லாத வேலைநிறுத்தங்கள். பயனில்லாத வெற்று அறிக்கைகள். இதனாலெல்லாம் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com