அகலட்டும் மது மயக்கம்!

எந்தவொரு மரணமும் அரசியலாக்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் வேதனைக்குரியவை. சசிபெருமாளின் மரணம் துரதிர்ஷ்டவசமானது, பரிதாபத்துக்குரியது, அனுதாபத்துக்குரியது. மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்கிற
Updated on
2 min read

எந்தவொரு மரணமும் அரசியலாக்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் வேதனைக்குரியவை. சசிபெருமாளின் மரணம் துரதிர்ஷ்டவசமானது, பரிதாபத்துக்குரியது, அனுதாபத்துக்குரியது. மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்கிற பரவலான கருத்துக்கு இந்த மரணம் வலு சேர்த்திருக்கிறது என்பதும், பொதுநல நோக்குடன் சசிபெருமாள் நடத்தி வந்த போராட்டம் அவரது மறைவால் பல்வேறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை மது விலக்குக்கு ஆதரவாக ஒருங்கிணைத்திருக்கிறது என்பதும் உண்மை.
 ÷பூரண மது விலக்கு வேண்டும் என்பதில் சமூக அக்கறையுள்ள யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. அதனால்தான், மது விலக்குக் கோரி சசிபெருமாள் நடத்திய அறப் போராட்டங்கள் அனைத்துக்குமே "தினமணி' நாளிதழ் முன்னுரிமை அளித்து வந்தது. கடந்த வியாழக்கிழமை வரையிலான சசிபெருமாளின் போராட்டங்களும், செயல்பாடுகளும் காந்திய வழியுடையதாக இருந்ததால் அதை ஆதரிக்க நம்மால் முடிந்தது. ஆனால், சசிபெருமாளின் மரணம் ஒரு காந்தியவாதியின் செயலாக இல்லை என்பதால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 ÷இத்தாலிய அரசியல் ராஜதந்திரி மாக்கியவல்லி தனது "இளவரசர்' என்கிற நூலில், "குறிக்கோள்தான் முக்கியமே தவிர, அதை அடைவதற்குக் கடைப்பிடிக்கும் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தவறில்லை' என்று குறிப்பிடுவார். "குறிக்கோள் உன்னதமாகவே இருந்தாலும், அதை அடைவதற்கான வழிமுறைகள் தவறாக இருந்தால் ஏற்புடையதல்ல. கடைப்பிடிக்கும் வழிமுறைகள்தான் குறிக்கோளை நியாயப்படுத்தும்' (ஙங்ஹய்ள் ஒன்ள்ற்ண்ச்ண்ங்ள் ற்ட்ங் ங்ய்க்) என்பார் மகாத்மா காந்தி. கடந்த வியாழக்கிழமை வரை காந்தியவாதியாக இருந்த சசிபெருமாள், வெள்ளிக்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிப் போராட்டம் நடத்த முற்பட்டபோது, காந்தியவாதி என்கிற தகுதியை இழந்துவிட்டார் என்பது நமது கருத்து.
 ÷உயர்நீதிமன்றம் 2014 பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தும்கூட, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகிலுள்ள உண்ணாமலைக்கடைப் பகுதியில் உள்ள "டாஸ்மாக்' மதுக் கடை செயல்பட்டதும், மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும்கூட அது அகற்றப்படாததும் தவறு. நீதிமன்ற அவமதிப்பு. கடந்த ஜூன் 30-ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது, அதிகாரிகள் 15 நாள்களில் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக சசிபெருமாள் முன்னிலையில் உறுதி அளித்தும் கடை அகற்றப்படவில்லை என்பது அதைவிட தவறு. அதற்காக?
 ÷தன்னை காந்தியவாதி என்று கூறிக் கொள்ளும் ஒருவர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்குச் சென்று அமர்ந்ததும், தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி? 60 வயதான சசிபெருமாள் 175 அடி உயர செல்லிடப்பேசி கோபுரத்தின் உச்சியில் கடும் வெயிலில் 5 மணி நேரம் அமர்ந்து நடத்திய போராட்டம் அறப் போராட்டமல்ல, காந்திய வழிமுறையும் அல்ல!
 ÷மது விலக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால், சசிபெருமாளின் செயலை நிச்சயமாக ஆமோதித்திருக்க மாட்டார். கண்டனம் தெரிவித்திருப்பார். போராட்டம் என்பது வெறியாக மாறிவிடக் கூடாது. காந்தியவாதியாக அறப் போராட்டம் நடத்தி வந்த சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப் பெரிய சோகம்.
 ÷சசிபெருமாளைப் பின்பற்றி, அவரது தோழர்கள் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி பயமுறுத்துகிறார்கள். உறவினர்கள் பூரண மது விலக்கு அறிவிக்கப்படாமல் சசிபெருமாளின் உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் போராட்டம் என்கிற பெயரில் தற்கொலை செய்து கொள்ள, தீக்குளிப்பது என்று எல்லோரும் தொடங்கி விட்டால் சட்டம் - ஒழுங்கு என்னவாகும்? நிர்வாகம் எப்படி நடைபெறும்?
 ÷1937-இல் மூதறிஞர் ராஜாஜியால் அறிமுகப்படுத்தப்பட்ட மது விலக்கைத் தளர்த்தி, 34 ஆண்டுகள் மதுவில்லாமல் இருந்த தமிழகத்தைக் குடிகார தேசமாக்கிய பெருமைக்குரிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்துவதாக இப்போது அறிவிக்கிறார். அரசியல் கட்சிகள் சசிபெருமாளின் குடும்பத்துக்குப் போட்டி போட்டுக் கொண்டு நிதியுதவி வழங்கி அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றன. சசிபெருமாள் போன்றவர்கள் கடந்த பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்?
 ÷பூரண மது விலக்குக்கு இன்று குரல் கொடுக்கும் காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள், ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எல்லாமே தி.மு.க., அ,தி.முக.வுடன் தேர்தலுக்காக ஒட்டி உறவாடிய கட்சிகள்தான். பா.ம.க.வும்கூட மது விலக்கை அமல்படுத்தாத 2006-2011 "மைனாரிட்டி' தி.மு.க. அரசை ஆதரிக்கவே செய்தது என்பதை எப்படி மறந்துவிட முடியும்?
 ÷தமிழக அரசு உடனடியாகச் செய்யக் கூடியவை சில இருக்கின்றன. முதலில், இலவசங்களுக்குத் துணிந்து விடை கொடுப்பது. இரண்டாவதாக, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள "டாஸ்மாக்' கடைகளையும், மதுபானக் கூடங்களையும் அகற்றுவது. படிப்படியாக, "டாஸ்மாக்' கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்துக்குக் கொண்டு செல்வது.
 ÷இளைய தலைமுறையினரை, அதிலும் குறிப்பாகப் பள்ளி மாணவ - மாணவியரை, மதுவுக்கு அடிமையாகாமல் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. அரசு உடனடியாகச் செயல்பட்டாக வேண்டும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com