எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் நாடாளுமன்றத்தின் மூலம் புதிய சட்டங்களை இயற்றவும், மசோதாக்களை நிறைவேற்றவும் நரேந்திர மோடி அரசால் முடியவில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, வாக்காளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டங்களை இயற்றியாக வேண்டும் என்பதால், அதை முடக்குவதில் எதிர்க்கட்சிகள் முனைப்பாக இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், அன்றாட நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் தேவையில்லை. எத்தனையோ, புதுப்புதுத் திட்டங்களையும், அறிவிப்புகளையும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அறிவித்து வருகிறார். செயல்படும் அரசு என்கிற தோற்றத்தை அவரது அறிவிப்புகள் ஏற்படுத்துகின்றன. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நரேந்திர மோடி அரசு பல முக்கியமான நிர்வாக ரீதியிலான முடிவுகளை எடுப்பதில், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும் ஏன் காலம் கடத்துகிறது என்பது புரியவில்லை.
பல முக்கியமான அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகள் காலியாக இருக்கின்றன. உடனடியாக நிரப்ப வேண்டிய காலியிடங்கள் நிரப்பப்படாமல், தாற்காலிகப் பொறுப்பில் விடப்பட்டிருக்கின்றன. செயல்படும் அரசில் இதுபோன்ற செயல்பாட்டுக் குறைகள் இருந்தால் எப்படி?
இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஏ.ஆர்.ஐ.) என்பது மிகவும் முக்கியமான ஆய்வு நிறுவனம். இந்தியப் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இயக்குநராகப் பணியாற்றிய இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம், இப்போது முழு நேர இயக்குநர் இல்லாமல் தொடர்கிறது. இதன் இயக்குநராகப் பணியாற்றிய எச்.எஸ். குப்தா தனது ஐந்தாண்டுப் பதவிக் காலத்திற்குப் பிறகு சிறிது காலம் பணி நீட்டிப்பிலும் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விளம்பரம் செய்யப்பட்டு, சென்ற பிப்ரவரி மாதம் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இப்போதுவரை யாரும் நியமிக்கப்படாமல், பெண் விஞ்ஞானி டாக்டர் ரவீந்தர் கௌர் தாற்காலிக இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குக் காரணமான அதிக மகசூல் தரும் கல்யாண் சோனா, சோனாலிகா போன்ற கோதுமை வகைகளை இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள்தான் உருவாக்கித் தந்தனர். சமீபகாலத்தில், இந்த ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய பூசா - 1121 அரிசி ரகம், ஆண்டொன்றுக்கு சுமார் 3 பில்லியன் டாலர் ஏற்றுமதி வருவாய் பெற்றுத் தருகிறது.
இந்திய விவசாயம் எதிர்கொள்ளும் பருவநிலை மாற்றம், குறைந்து வரும் பாசன நிலங்கள், பாசன வசதிகள் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாகப் புதிய ரக நெல், கோதுமைப் பயிர்களை உருவாக்க வேண்டிய ஆராய்ச்சி நிறுவனம் முறையான தலைமை இல்லாமல் செயல்பட்டால் எப்படி? நேர்முகத் தேர்வு நடத்தி எட்டு மாதங்களாகியும், ஒரு விஞ்ஞானியைத் தேர்ந்தெடுக்க அரசால் முடியவில்லை என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது? அரசு இதுபற்றிக் கவலைப்படாமல் மெத்தனமாக இருக்கிறது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமம் (சி.எஸ்.ஐ.ஆர்.) என்பது இந்தியாவின் மிகப்பெரிய, முதன்மையான அறிவியல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம். கடந்த ஜனவரி 2014 முதல் இந்த நிறுவனத்திற்கு நிரந்தரமான இயக்குநர் இல்லாத நிலை நீடிக்கிறது. சி.எஸ்.ஐ.ஆர்.-இன் கீழ் இயங்கும் 38 அறிவியல் ஆய்வுக்கூடங்கள் தாற்காலிக இயக்குநர்களின் மேற்பார்வையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த பிப்ரவரி 2015-இல் பதவி ஏற்றுக்கொண்ட எம்.ஓ. கார்க்கின் பதவிக்காலம் வெறும் ஆறே மாதம். ஆறு மாதங்களில் அவரால் என்ன செய்துவிட முடியும்?
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ஐ.சி.எம்.ஆர்) தலைமை இயக்குநர் பதவியில் இருந்த டாக்டர் வி.எம். கட்டோச் பிப்ரவரி 2013-இல் ஓய்வுபெற்று, அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பும் செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம் அவர் ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார். கடந்த ஐந்து மாதங்களாக அந்தப் பதவிக்கு முழுநேரத் தலைமை இயக்குநர் நியமிக்கப்படவில்லை.
அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளின் தலைமையில் இயங்கிய ராணுவத் தளவாட, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.வின் தலைமை இயக்குநராகக் கடந்த மே மாதம் பிரபல விஞ்ஞானி எஸ். கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டுவிட்டார். ஐந்து மாதங்கள் அந்த இடம் காலியாக இருந்தது.
பல மத்திய பல்கலைக்கழகங்கள், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தலைமைப் பொறுப்புகள் நிரப்பப்படாமல் தொடர்கின்றன. ஆராய்ச்சி நிறுவனங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் தலைமைப் பொறுப்புகள் நிரப்பப்படாமல் இருந்தால், அரசால் ஒதுக்கப்படும் மக்களின் வரிப்பணம் முறையாக செலவழிக்கப்படாமல் வீணடிக்கப்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
இந்தப் பதவிகள் உடனடியாக நிரப்பப்படாமல் இருப்பதற்கு, அரசியல் தலையீடுதான் காரணமாக இருக்க முடியும். அரசின் தலையீடு இல்லாமல் இதுபோன்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்கு உடனுக்குடன் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிரப்பப்படுவது அவசியம். அப்போதுதான், ஆய்வுகள் முடுக்கிவிடப்படும். தரமான விஞ்ஞானிகள் உருவாக்கப்படுவார்கள்.
மக்களின் வரிப்பணமும் முறையாகச் செலவிடப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!

ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள்! சென்னை ஐஐடி-யில் அறிமுகம்
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

