கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில்தான் மிக அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பல ஆண்டுகள் முடங்கிக் கிடந்த இந்திய நாடாளுமன்றத்துக்குப் புதுப் பொலிவு ஏற்பட்டது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, மழைக் காலக் கூட்டத் தொடரின் முதல் வாரமே அமளி துமளியாக வீணடிக்கப்பட்டிருக்கிறது.
ஆட்சி அனுபவம் உள்ள கட்சி எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்தும், நாடாளுமன்றத்தை முடக்கி அதில் அரசியல் ஆதாயம் தேட முயல்வது என்பது வேதனையை ஏற்படுத்துகிறது. நாடாளுமன்றத்தைச் செயல்பட அனுமதிப்பதற்கு காங்கிரஸ் விதித்திருக்கும் நிபந்தனை, விளக்கங்களோ விவாதங்களோ அல்ல, பதவி விலகல்கள். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் பதவி விலகினால் ஒழிய நாடாளுமன்றத்தை நடத்தவிடப் போவதில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்த "வியாபம்' முறைகேடு தொடர்பான விசாரணை சி.பி.ஐ.யால் நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவு வெளிவந்து, முதல்வர் செüஹானுக்குத் தொடர்போ அல்லது அவரது தலையீடோ இருந்தது என்பது தெரியவந்தால், அவர் பதவி விலகக் கோருவதில் நியாயம் இருக்கிறது. இதுவரை அவர் மீது நேரடியாகக் குற்றம்சாட்டப்படாத நிலையில் அவரது பதவி விலகலை நாடாளுமன்றம் நடைபெறுவதுடன் முடிச்சுப் போடுவது எப்படி சரி?
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது ஐ.பி.எல்.லின் சூத்திரதாரி லலித் மோடி அவருக்கு நெருக்கமாக இருந்தார் என்பது ஊரறிந்த ரகசியம். அதற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக இருந்தது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு. முறைகேடுகள் இருந்திருந்தால் அதை வெளிக் கொணர்ந்திருக்க வேண்டிய பொறுப்பு அசோக் கெலாட் அரசுக்கு உண்டு. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக, லலித் மோடியை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்துவிட்டு, அவரது பழைய தொடர்பின் அடிப்படையில், இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகி இருக்கும் வசுந்தரா ராஜே பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத் தொடரை முடக்குவது எப்படி சரி?
சுஷ்மா ஸ்வராஜ் விவகாரத்துக்கே வருவோம். பிரிட்டிஷ் நாட்டுச் சட்டத்துக்கு உள்பட்டு மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு போர்ச்சுகல் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுமானால், அதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று கடிதம் எழுதியதாக சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக் கொள்கிறார். நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கத் தயார் என்று பகிரங்கமாகத் தெரிவித்தும்விட்டார். அந்தப் பிரச்னை விவாதிக்கப்படுவதில் ஆளும்கட்சிக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், சுஷ்மா ஸ்வராஜின் பதவி விலகலுக்குப் பிறகுதான் விவாதம் என்று காங்கிரஸ் அடம் பிடிப்பது எப்படி சரி?
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, நரேந்திர மோடி அரசுக்கு எதிராகக் கொள்கை ரீதியாக முன்வைக்க எந்தவிதப் பிரச்னையும் இல்லாததுதான், நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்கும் அந்தக் கட்சியின் பிடிவாதத்திற்குக் காரணம். அவர்கள் கோரிக்கை வைக்கும் மூன்று பேரும் பதவி விலகினால் பிரச்னை தீர்ந்து விடுமா என்றால் இல்லை. புதியதொரு பிரச்னையை எழுப்பி, இன்னும் யாராவது பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றம் முடக்கப்படும். கடைசியில், பிரதமர் நரேந்திர மோடியையும் பதவி விலகச் செய்து மீண்டும் தேர்தல் வந்தாலொழிய காங்கிரஸின் இந்த அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என்று தோன்றவில்லை.
காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பது போலப் பதவி விலகல்களை ஆளும் பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது தெளிவு. காங்கிரஸýம் சரி, நாடாளுமன்றம் நடைபெறுவதை அனுமதிக்கப் போவதில்லை. இதை ஆளும் கட்சி முன்கூட்டியே உணர்ந்து எதிர்க்கட்சி வரிசையில் பிளவை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டது.
மழைக் காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் 11 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக ஒன்பது மசோதாக்கள் காத்திருக்கின்றன. இவையெல்லாம், முறையாகவும் முழுமையாகவும் விவாதிக்கப்பட வேண்டியவை. அது ஆளும்கட்சியுடையது மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் கடமையும்கூட என்பது ஏறத்தாழ 60 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸýக்குத் தெரியாததல்ல.
நாடாளுமன்றம் என்பது விவாதத்துக்கும், பேச்சுவார்த்தைக்கும், கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கும் உரிய இடம். எதிர்க்கட்சிகள் அவையைப் பயன்படுத்தி, அரசின் தவறுகளை, பலவீனங்களை, குறைகளை மக்கள் மன்றத்துக்கு உணர்த்த வேண்டிய கடமையைச் செய்யாமல் நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம், மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை குறையுமே தவிர, எதிர்க்கட்சிகளின் மீதான நம்பிக்கை அதிகரிக்கவும் செய்யாது, ஆளுங்கட்சியின் மீது அதிருப்தியும் ஏற்படாது.
மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத மோடி அரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி, இடித்துரைப்பாளர் (திருத்த) மசோதா, லஞ்ச ஊழல் தடுப்பு (திருத்த) மசோதா, ஏன் லோக்பால் மசோதா போன்றவற்றை நிறைவேற்ற முற்பட வேண்டிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவதில் காட்டும் ஒற்றுமையை, உறுப்பினர்களின் சம்பளத்தையும், சலுகைகளையும் அதிகரிப்பதை எதிர்ப்பதிலும் காட்டுவார்களேயானால், இவர்கள் உத்தமர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.