கார்கில் கற்றுத் தந்த பாடம்!

கார்கில் ஊடுருவல் நடந்து 16 ஆண்டுகளாகிவிட்டன. கார்கில் வெற்றி தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
2 min read

கார்கில் ஊடுருவல் நடந்து 16 ஆண்டுகளாகிவிட்டன. கார்கில் வெற்றி தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கார்கில் ஊடுருவலைப் பொருத்தவரை, இரண்டு புதிர்கள் இன்னும் விடுவிக்கப்படாமலே தொடர்கின்றன. முதலாவது புதிர், எப்படி இத்தனை தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நமது ராணுவத்துக்குத் தெரியாமல் ஊடுருவ முடிந்தது என்பது. இரண்டாவது புதிர், இந்தத் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குத் துணை புரிந்த பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றி அதற்குப் பிறகு நடந்த இந்திய - பாகிஸ்தானிய பேச்சுவார்த்தைகள் எதிலுமே இந்தியத் தரப்பு விளக்கம் கேட்காமல் இருந்தது என்பது.
 இந்திய ராணுவத்தின் பலவீனங்களையும், குறைபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக நமது எல்லைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கும், கார்கில் போருக்குக் காரணமான பாகிஸ்தானுக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஊடுருவிய தீவிரவாதிகளைத் தீவிரமாக நமது ராணுவம் எதிர்கொண்டபோதுதான், நம்மிடமிருந்த போபர்ஸ் பீரங்கிகளுக்குப் போதிய குண்டுகள் கையிருப்பு இல்லை என்கிற உண்மை வெளிப்பட்டது என்பது அதிகம் பேசப்படாத ராணுவ ரகசியம்.
 அன்றைக்கு இஸ்ரேலும், ரஷியாவும் போபர்ஸ் பீரங்கிக்கான குண்டுகளை உடனடியாக இந்தியாவுக்குத் தந்து உதவி இருக்காவிட்டால், தீவிரவாதிகளின் முன்னேற்றத்தை நம்மால் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது. போபர்ஸ் பீரங்கிக் குண்டுகள் மட்டுமல்ல, ராணுவத்தின் அடிப்படைத் தேவைகளான துப்பாக்கி ரவைகள், குளிர்ப் பிரதேசங்களில் போரிடத் தேவையான ராணுவ வீரர்களின் உடைகள், பனிமலைகளில் அணிந்து கொள்வதற்கான பூட்ஸýகள், ஏன், மரணமடைந்த ராணுவ வீரர்களைத் தத்தம் ஊர்களுக்கு அனுப்புவதற்கான சவப்பெட்டிகள்கூட இந்திய ராணுவத்திடம் இருக்கவில்லை என்கிற பரிதாபகரமான நிலைமை வெளிப்பட்டது கார்கில் போரின்போதுதான்.
 போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் முறைகேடு என்கிற குற்றச்சாட்டு எழுந்தது முதல், மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த வி.பி. சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவே கெüடா, இந்தர்குமார் குஜ்ரால் அரசுகள் அனைத்துமே, ராணுவத்துக்கான தேவைகளை வாங்குவதில் தயக்கம் காட்டின. ராணுவத் தளவாட விற்பனைகள் அனைத்துமே இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகின்றன என்கிற உண்மை நிலைமை அவர்களை பயமுறுத்தியது. தங்கள் மீது களங்கம் சுமத்தப்பட்டு விடுமோ என்கிற பயத்தினால், இந்திய ராணுவத்தையே பலவீனப்படுத்தி விட்டிருந்தன அந்த அரசுகள்.
 கார்கில் ஊடுருவல் நடந்து 16 ஆண்டுகளாகிவிட்டன. கார்கில் போரில் மிகவும் கசப்பான பல உண்மைகளை நாம் எதிர்கொள்ள நேரிட்டது. அதற்குப் பிறகு, அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு இந்திய ராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி. உண்மையைச் சொல்வதாக இருந்தால், இல்லை என்பதுதான் பதில்.
 ராணுவத்தில் டாங்கிகள், பீரங்கிகள் போன்ற தளவாடங்களின் எண்ணிக்கை பலம் என்பது ஒருபுறம். அதைவிட முக்கியமானது அந்தத் தளவாடங்களுக்குத் தேவையான வெடிமருந்துகள், உதிரி பாகங்கள், எரிபொருள் போன்றவை போதிய அளவில் கையிருப்பாக இருப்பது. குறைந்தது 40 நாள்களுக்கான வெடிமருந்துகள் கைவசம் இருக்க வேண்டும் என்பதுதான் ராணுவத்தின் "கையிருப்பு விதி'.
 சமீபத்தில் வெளியாகி இருக்கும் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையின்படி, 2013 மார்ச் நிலவரப்படி, இந்திய ராணுவத்தில் கையிருப்பு விதி கடைப்பிடிக்கப்படவில்லை என்று தெரிகிறது. 170 வகையான அத்தியாவசிய வெடிமருந்துகளில் ஏறத்தாழ 125 வகைகள் 20 நாள்களுக்கான தேவைக்குக் கூடப் போதுமானதாக ராணுவத்திடம் இல்லை என்று தெரிகிறது. குறிப்பாக 2008 முதல் 2013 வரையிலான ஐந்தாண்டுகளில், மிகவும் முக்கியமான தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிமருந்துகள் பல 10 நாள் தேவைக்குக்கூடப் போதுமானதாக நமது ராணுவத்திடம் காணப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றபிறகு, அதிலும் குறிப்பாக மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பிரச்னை உரிய கவனத்துடன் கையாளப்பட்டு வருகிறது என்பது ஆறுதலான செய்தி. ராணுவத்துக்கும், விமானப் படைக்கும் தேவையான மிக முக்கியமான தளவாடங்களை வாங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு விட்டன. அதுபோல, ராணுவத் தளவாட ஒப்பந்தப் புள்ளிகளுக்குத் தெளிவான விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன.
 ஏறத்தாழ ரூ.70,000 கோடிக்கான ராணுவத் தளவாடங்கள், வெடிமருந்துகள், உதிரி பாகங்கள் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது, நீண்ட காலத்துக்குப் பிறகு இந்திய அரசு பாதுகாப்பு பற்றிய புரிதலுடனும், அக்கறையுடனும் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அதுவரைக்கும் மகிழ்ச்சி.
 அதே நேரத்தில், எந்த நேரத்திலும் ராணுவம் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இனியும் முந்தைய ஆட்சியாளர்களின் மெத்தனத்தை நரேந்திர மோடி அரசு குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைப்படி, துப்பாக்கிகளுக்கும், ஏவுகணைகளுக்கும் (மிசைல்ஸ்) தேவைப்படும் வெடிமருந்துகளின் பற்றாக்குறை அளவு 84%.
 எல்லா வகையிலும் தயார் நிலையில் இருப்பதற்குப் பெயர்தான் ராணுவம்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com