அநாகரிகத்தின் அடையாளம்!

அண்மையில் வெளியான சமூக, பொருளாதார, ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் பல அதிர்ச்சியான தகவல்களைத் தருகின்றன. இந்தத் தகவல்கள் இந்தியா வல்லரசாகும் என்கிற கனவைத் தகர்ப்பதாக அமைந்திருக்கின்றன. அதில் பேரதிர்ச்சி தருவதாக அமைந்திருப்பது மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் தொடர்கிறது என்பதுதான்.
Updated on
2 min read

அண்மையில் வெளியான சமூக, பொருளாதார, ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் பல அதிர்ச்சியான தகவல்களைத் தருகின்றன. இந்தத் தகவல்கள் இந்தியா வல்லரசாகும் என்கிற கனவைத் தகர்ப்பதாக அமைந்திருக்கின்றன. அதில் பேரதிர்ச்சி தருவதாக அமைந்திருப்பது மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் தொடர்கிறது என்பதுதான். உலகில் வளர்ச்சி அடைந்த ஒரு தேசத்தின் அடையாளமே மனிதக் கழிவுகளை மனிதர்களின் நேரிடையான தலையீடில்லாமல் அகற்றும் வசதியுள்ள நவீன கழிப்பறைகளும், கழிவுநீர் வடிகால்களும்தான்.
 மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் அநாகரிகத்துக்கு முடிவு கட்டுவது பற்றி நிறையவே பேசியும் எழுதியும் ஆகிவிட்டது. அப்படி இருந்தும், சமூக, பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இப்போதும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. எண்ணிக்கையில் எடுத்துக்கொண்டால் பல லட்சம் பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும், அவர்களில் பெரும்பாலோர் மகளிர் என்பதும்தான் மிகப் பெரிய அவலம்.
 சமூக, பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் என்று கருதப்படும் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில்கூட மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் அநாகரிக வழக்கம் இன்னமும் தொடர்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த வழக்கம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்டாலும் குக்கிராமங்கள் சிலவற்றில் இந்த வழக்கம் தொடரக் கூடும்.
 கழிப்பறைகளிலிருந்து மனிதர்கள் மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் வழக்கம், கழிவுநீர் வடிகால் இணைப்பு இல்லாத ஊர்களில்தான் காணப்படுகிறது. இதுபோன்ற கழிப்பறைகளிலிருந்தும், ரயில்வே தண்டவாளத்தின் இருபுறங்களிலிருந்தும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருமே தலைமுறை தலைமுறையாக இந்தப் பணியைச் செய்து கொண்டிருப்பவர்கள். இவர்களை இந்தப் பணிக்கு பயன்படுத்தும் குற்றத்தைச் செய்வது அரசுத் துறைகள்தான் என்பதுதான் அதைவிடக் கண்டனத்துக்குரியது.
 வேடிக்கை என்னவென்றால், மனிதர்களே மனிதக் கழிவை அகற்றும் செயலுக்கு 1993-ஆம் ஆண்டிலேயே நரசிம்ம ராவ் தலைமையிலான அப்போதைய அரசு தடை விதித்துவிட்டது. ஆனால், தடையையும் மீறி இந்தப் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது என்பதும், அதை அரசு இயந்திரம் அனுமதித்தது என்பதும் மிகப் பெரிய தலைகுனிவு.
 1993-இல் கொண்டு வரப்பட்ட சட்டம், 2013-இல் கடுமையாக்கப்பட்டு, தண்டனையும் கடுமையாக்கப்பட்டது. இந்த அவலம் தொடர்ந்து நடைபெறுவதன் முக்கியமான காரணம், இதில் ஈடுபடுவோருக்கு இதை விட்டால் பிழைப்புக்கு வேறு வழி இல்லை என்பதுதான். அதனால்தான் 2013-இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, இந்த வேலையில் ஈடுபட்டிருப்போரின் மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதற்காக ஒரு காலவரம்பும் நிர்ணயிக்கப்பட்டது.
 சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதே தவிர, அதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. சொல்லப்போனால், அதுபற்றி யாரும் அக்கறையே காட்டவில்லை. அதிகாரிகளின் உத்தரவுப்படியும், அவர்களுக்குத் தெரிந்தும் இந்த அநாகரிகம் தொடர்ந்து வந்தது என்பது மட்டுமல்ல, சட்டத்தை மீறி மனிதர்களைக் கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றிய ஒருவர்மீதுகூட வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
 இந்த அநாகரிகத்தைத் தடுத்து நிறுத்தாததற்காக மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் பலமுறை கண்டித்திருக்கிறது. பல்வேறு சமூக அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் பழக்கத்துக்கு எதிராகப் போராட்டங்களையும், விழிப்புணர்வுப் பிரசாரங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆனாலும்கூட, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
 மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்போர் அனைவருமே சமூகத்தின் அடித்தட்டு மக்களான ஹரிஜனங்களாகத்தான் இருக்கின்றனர். அதனால் இவர்களுக்காகக் குரல் கொடுக்கவோ, இந்த அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவோ ஆதிக்க ஜாதியினர் யாருமே அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் குழந்தைகள் படிப்பதற்கும் வேறு தொழிலில் ஈடுபடுவதற்கும் அரசும் வழிகோலவில்லை, சமூகமும் உதவவில்லை.
 மனிதக் கழிவை அகற்றுவது என்பது உடல்ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் அவர்களைப் பாதிக்கிறது. தாங்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற அடிமைத்தன மனோநிலை அவர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இதைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத நிலையில், தங்கள் பிழைப்புக்கு மனிதக் கழிவை அகற்றும் பணியில் தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. அவர்களுக்கு வேறு தொழிலில் பயிற்சி அளிக்கும் திட்டங்கள் எல்லாமே வெறும் காகிதத்தில் மட்டுமே தொடர்கின்றன என்பதுதான், இன்னும் இந்த அவலம் தொடர்வதன் அடிப்படைக் காரணம்.
 மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காதவரை, "தூய்மை இந்தியா' என்கிற "ஸ்வச் பாரத்' திட்டத்துக்கு எந்தவித அர்த்தமோ, பயனோ இருக்காது. மகாத்மா காந்தியின் ஆன்மா சாந்தியும் அடையாது!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com