இரு நாள்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, "நீதித் துறையில் போலிச் சான்றிதழ்களுடனும், மன்றத்தில் வாதாடாமலும் இருக்கும் வழக்குரைஞர்கள் 30% பேர் உள்ளனர். இவர்களால் நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுகிறது' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது வழக்குரைஞர் உலகம் ஏற்கெனவே நன்கு அறிந்த ஒன்று. பார் கவுன்சிலை சேர்ந்தவரே இதைப் பற்றி மனம் விட்டுப் பேசுவதுதான் புதிது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பார் கவுன்சில் 2011ஆம் ஆண்டு தெரிவித்த தகவலின்படி இந்தியாவில் 13 லட்சம் வழக்குரைஞர்கள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் 4% வழக்குரைஞர்கள் புதிதாக வந்து கொண்டிருக்கின்றனர்.
30% பேர் போலி அல்லது எந்த வழக்குகளிலுமே இதுவரை ஆஜர் ஆகாதவர்கள் என்றால், குறைந்தது 4 லட்சம் பேர் இருக்கக் கூடும்.
இந்திய நீதிமன்றங்களில் ஏதோ ஒரு காரணத்துக்காகவும், மூத்த வழக்குரைஞர்கள் அல்லது வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாகிகளின் பெரும்பான்மை கருத்துக்கு முரணாகவும் நீதிமன்றப் புறக்கணிப்பை நடத்துவோராக, நீதிமன்றத்துக்குள்ளேயே கட்டப்பஞ்சாயத்து செய்பவராக, காவல் துறையினருடன் மோதலில் ஈடுபடுபவராக இருப்போரில் பலரும் இந்த 30% விழுக்காட்டைச் சேர்ந்தவர்களே. இவர்களால் ஒட்டுமொத்த நீதிமன்றப் பணியும் பாதிக்கப்படுகிறது.
இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வீரர்களில் அதிகம் பேர் சட்டம் படித்தவர்கள். பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி, லாலா லஜபதி ராய், சி.ஆர். தாஸ், பிபின் சந்திர பால், வ.உ. சிதம்பரம் பிள்ளை என்று சொல்லிக் கொண்டே போகலாம். உள்ளூர் விடுதலை வீரர்களிலும் அதிகம் பேர் வழக்குரைஞர்களாக இருந்தனர். அப்படிப்பட்ட நீதித் துறையில்தான் இப்போது இத்தகைய அவலம் நேர்ந்துள்ளது.
போலிச் சான்றிதழ்கள் தயாரித்துத் தரும் கும்பலைச் சேர்ந்தவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தயாரித்து அளித்த சான்றுகளில் பெரும்பாலானவை சட்டப் படிப்பு தொடர்பானவை. கோவையில் அண்மையில் கைது செய்யப்பட்ட இரண்டு வழக்குரைஞர்கள், தனிப்பட்ட முறையில் வழக்குகளில் சமரசத் தீர்ப்பாயம் நடத்தியது தெரிய வந்தது.
பல நேர்வுகளில் காவல் நிலையத்தில் தகராறிலும், போராட்டங்களின்போது அடிதடியிலும் ஈடுபடுவோர் பெரும்பாலும் பதிவுபெற்றுச் செயல்படாத வழக்குரைஞர்கள்தான். சமூக அங்கீகாரம், வழக்குரைஞர் சங்கத்தில் நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றல் ஆகியன கருதியே இத்தொழிலுக்கு இதுபோன்றவர்கள் வருகிறார்கள். ஈரோடு சுற்றுவட்டாரத்தில், வாகன விபத்துக் காப்பீட்டு வழக்குகளில் நீதிபதி - வழக்குரைஞர் - காவல் நிலையம் கூட்டணி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அந்த வழக்குகள் ஏனோ மறக்கப்பட்டுவிட்டன.
போலிச் சான்றிதழ் மூலம் வழக்குரைஞர் தொழிலுக்கு வந்தவர்களுக்கு சட்ட நுணுக்கம் தெரியாது. வாதத் திறமை இருக்காது. ஆனால், தகராறு செய்யும் வலு கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கான அரசியல் சாய்வுகளும் இருக்கும். இதன் காரணமாகவே, வழக்குரைஞர் நிர்வாகிகள் தேர்தல் அடிதடியாகவும், தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் கொலையாகவும் முடியும். இவர்கள் எல்லாவற்றையும் எதிர்ப்பார்கள். எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பார்கள். நீதிபதி சொல்லும் தீர்ப்பை எதிர்த்து அதே நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்துவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே, போலிச் சான்றிதழ்கள் பெற்று பார் கவுன்சில் உறுப்பினராக மாறிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இத்தகைய போலிச் சான்றிதழ்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மாநில பார் கவுன்சில் இவற்றை அனுமதிக்கக் கூடாது என்றும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்குக் காரணம் போலிச் சான்றிதழ்கள் பெற்று, வழக்குரைஞர் தொழிலுக்குப் பதிவு செய்து கொண்ட சிலருடைய நடவடிக்கைகளே. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தால் ஓரளவுக்கு மேல் ஏதும் செய்ய முடியவில்லை. ஏனெனில், இத்தகைய வழக்குரைஞர்களை சேர்த்துக் கொள்ளும் பார் கவுன்சில்கள்தான் இதில் உரிய நடவடிக்கையை எடுக்க முடியும். நீதிமன்றம் வழிகாட்டுதலை மட்டுமே வழங்க முடியும்.
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வாதாட வேண்டும் என்றால், அந்த வழக்குரைஞர், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பதிவேட்டில் இடம் பெறுவதற்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடும் தகுதி பெற்றவர் ஆகிறார். ஆனால், மாநில அளவில் அத்தகைய நிலைமை இல்லை. மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டால் போதும்.
இந்தப் பதிவுக்கும் ஒவ்வொரு மாநில பார் கவுன்சிலும் தனக்கே உரித்தான விதிமுறைகளை வைத்துள்ளன. தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்யும் வழக்குரைஞர்களுக்கு சட்ட நுணுக்கம் தொடர்பான தேர்வு நடத்தியும், அவர்கள் எத்தகைய சான்றிதழ்களைப் பெற்றிருந்தால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றும் நிபந்தனை விதித்து, சான்றுகளை முறைப்படி சரிபார்ப்பதும்தான் இத்தகைய போலி வழக்குரைஞர்களைத் தடுக்க உதவியாக அமையும்.
மாநில பார் கவுன்சில் தனது விதிமுறைகளைக் கடுமையாக்குவது மட்டுமே நீதித் துறையை தூய்மையாக்கும். அப்படிச் செய்யத் தவறினால், கருப்பு அங்கிகளுக்கு எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையும் இல்லாமல் போய்விடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!

ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள்! சென்னை ஐஐடி-யில் அறிமுகம்
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

