தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தேர்தல் சீர்திருத்தம் குறித்து வெளியிட்டிருக்கும் கருத்தை நமது அரசியல் கட்சிகள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. பொருட்படுத்தியிருந்தால், அவரது பேச்சு அரசியல், ஊடக வட்டாரங்களில் பரபரப்பான விவாதப் பொருளாகி இருக்கும். அது குறித்து யாரும் கருத்துத் தெரிவிக்கக்கூட முன்வரவில்லை என்பதிலிருந்து, நமது அரசியல்வாதிகளுக்கு இப்போதைய தேர்தல் முறையில் எந்தவித மாற்றத்தைக் கொண்டுவருவதிலும் அக்கறை இல்லை என்பது தெரிகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் சில சீர்திருத்தங்களை முன் வைத்திருக்கிறார். அதில் முதலாவது, தேர்தலில் பங்கு பெறாத அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை ரத்து செய்வது. இந்தியாவில் 1,900 பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தேர்தலில் போட்டியிடுவதுகூடக் கிடையாது. அவர்கள் கட்சி நடத்துவதற்குக் காரணமே தங்களது கருப்புப் பணத்தைக் கட்சி நன்கொடையாகக் காட்டி அதை வெள்ளையாக்குவதற்கும், வருமான வரி விலக்கு பெறுவதற்கும்தான்.
இதுபோல, தேர்தலில் போட்டியிடாத, பதிவு பெற்ற அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்திற்குத் தரப்படவேண்டும் என்பது நஜீம் ஜைதியின் கருத்து. இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது, கூடாது. அப்படி இருந்தும் ஏன் இப்படியொரு நிலை தொடர்கிறது என்பதுதான் புதிராக இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற செய்கைகள் இப்போது கடுமையான தண்டனைக்குரிய குற்றங்கள் அல்ல. அதுபோன்ற நடவடிக்கைகள் புலன்கொள் குற்றமாக (காக்னைசபில் அபென்ஸ்) அறிவிக்கப்பட்டு, பிடியாணையோ, பிணையில் விடுவித்தலோ இல்லாததாகச் செய்யப்பட வேண்டும். இப்போது, பணம் கொடுக்கும்போது யாராவது கையும் களவுமாகப் பிடிபட்டாலும்கூட அவர்களைப் பிணையில் எடுத்துவிட முடியும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, பணம் பட்டுவாடா நடந்தது தெரிந்தால் அந்தத் தேர்தலையே ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். அதேபோல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரூ.29 லட்சமும், மக்களவைத் தேர்தலுக்கு ரூ.70 லட்சமும் வேட்பாளர்களின் அதிகபட்ச செலவாக நிர்ணயித்திருப்பதும் மாற்றப்பட வேண்டும் என்கிறார் அவர். இதைவிடப் பல மடங்கு செலவு செய்யும் வேட்பாளர்கள், பொய்க் கணக்கைத்தான் தாக்கல் செய்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
தேர்தல் ஆணையம் கோரும் மிகவும் முக்கியமான சீர்திருத்தம் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளைப் பற்றியது. இப்போது, ஒருவரிடமிருந்து ரூ.20,000 வரை அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்து விவரங்கள் தெரிவிக்க வேண்டியதில்லை. அதனால் லஞ்சமாகப் பெறும் பணம் மிகப்பெரிய அளவில் நன்கொடை என்கிற பெயரில் அரசியல் கட்சிகளின் கஜானாவை நிரப்பிக்கொண்டிருக்கிறது.
அரசியல் கட்சிகள் ரூ.2,000-க்கும் அதிகமான நன்கொடை பெறும்போது, அதற்கு ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்பதும், யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். அதுமட்டுமல்ல, தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் நன்கொடை பெறுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறார். நஜீம் ஜைதி கோரியிருக்கும் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், அரசியல் கட்சிகள் மூலம் தேர்தலில் புழக்கத்தில் விடப்படும் கணக்கில் இல்லாத பணம் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கும்.
அரசியல் கட்சிகள் இதுகுறித்து மெளனம் காப்பதற்கு முக்கியமான காரணம், கணக்கில் வராத ஊழல் பணத்தில்தான் அவர்களது நடவடிக்கைகள் எல்லாமே நடைபெறுகின்றன என்பதுதான். ஊழலின் ஊற்றுக்கண்ணே அரசியல் கட்சிகளிடமும், தேர்தலிலும் புழங்கும் கணக்கில் காட்டப்படாத பணம்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகத் தேர்தலில் செலவழிக்கிறார்களோ, அதைவிடப் பலமடங்கு அதிகமாக ஆட்சியில் ஊழல் செய்ய முற்படுகிறார்கள் அரசியல்வாதிகள்.
எல்லா அரசியல் கட்சிகளும் தாங்கள் பெறும் கட்சி நிதியில் 85% பெயர் குறிப்பிடாத தனிநபர்களிடமிருந்து ரூ.20,000-க்கும் கீழே பெறப்பட்டதாகத்தான் தெரிவிக்கின்றன. கட்சி மாநாடு நடத்தி நிதி திரட்டுவதேகூட, ஊழலில் சம்பாதித்த பணத்தைக் கட்சிக் கணக்கில் வரவு வைப்பதற்கான வழிமுறைதான். இப்போதிருக்கும் சட்டம், அரசியல் கட்சிகளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.
கணக்கில் இல்லாத பணம் குறித்து நாடுதழுவிய அளவில் விவாதம் நடைபெறும் இந்த வேளையில் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்து யாருமே பேசாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் ஏன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்படக் கூடாது என்பதைக் குறித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியின் பரிந்துரைகள் குறித்தும் ஆக்கபூர்வமான சிந்தனை எழ வேண்டிய நேரம் இது.
நஜீம் ஜைதி கூறியிருப்பதுபோல, அரசியல் கட்சிகளின் நன்கொடை குறித்த சட்டம் திருத்தப்பட்டு, போலி அரசியல் கட்சிகள் ஒழிக்கப்படாவிட்டால், எல்லா அமைப்புகளும் பணத்தில் கட்டுப்பாட்டில் சிக்கி, நேர்மையான தேர்தல் என்பதே இயலாத நிலைமை ஏற்படக்கூடும். தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் எழ வேண்டும். மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்ஜாமீன் நிராகரிப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பவன் கேரா மனு
தொழிலாளி கொலையில் தொடா்புடைய சிறுவன் உள்ளிட்ட மூன்று போ் கைது
மூளைச்சாவு அடைந்த நபரின் இரு கைகள் தானம்; பெண்ணுக்கு மறுவாழ்வு

போக்குவரத்து விதிமீறல்கள்: 3 மணி நேர நடவடிக்கையில் 11,800 போ் மீது அபராதம் விதிப்பு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

