குடும்பக் க(ா)ட்சி!

சமாஜவாதி கட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்
Updated on
2 min read

சமாஜவாதி கட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்பம், உத்தரப் பிரதேச அரசியலையே புரட்டிப்போட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட சமரசத்திற்குப் பிறகு, நிலைமை கட்டுக்குள் அடங்கிவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது. அது வெறும் மாயைதான் என்பதை இப்போதைய சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.
2012-இல் சமாஜவாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார். அப்போதே, முலாயம்சிங் யாதவின் சகோதரர் சிவபால் சிங் யாதவ் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பிரச்னை எழுப்பினார். இப்போது வேடிக்கை என்னவென்றால் முலாயம்சிங் யாதவ் தனது சகோதரர் சிவபால் சிங் யாதவின் பக்கமும், இவர்களுக்கு எதிராக மகன் அகிலேஷ் யாதவும் இருப்பதுதான்.
குடும்ப அரசியல் என்னவெல்லாம் குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதற்கு சமாஜவாதி கட்சி ஒரு நல்ல உதாரணம். முலாயம் சிங் உள்பட அவரது குடும்பத்தில் ஐந்து பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவும், சகோதரர் சிவபால் சிங் யாதவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள். அகிலேஷின் அமைச்சரவையில் சிவபால் சிங் யாதவுக்கு முக்கியப் பொறுப்பு தரப்பட்டிருந்தது என்பது மட்டுமல்ல, அவர் கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
முலாயம் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் ராம்கோபால் யாதவ் அகிலேஷின் ஆதரவாளராக இருப்பதிலிருந்து குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவுதான் இப்போது கட்சியில் பிளவு ஏற்படுவதற்குக் காரணம் என்பது தெளிவாகிறது. இவர்களுக்குள் நடைபெறும் பலப்பரீட்சையில், சமாஜவாதி கட்சி சிக்கித் தவிக்கிறது.
மக்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, தனது தந்தை காலத்து அரசியலை முற்றிலுமாக மாற்றி வளர்ச்சி அரசியலை முன்னெடுத்துச் செல்லும் கட்சி இது என்கிற பிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த முனைந்தார் முதல்வர் அகிலேஷ் யாதவ். கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வர் அகிலேஷ் யாதவ் முயற்சியால், பல வளர்ச்சிப் பணிகள் முடுக்கி
விடப்பட்டன. ஆக்ரா - லக்னெள ஆறு வழி நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில் என்று பல திட்டங்களை அவரால் நிறைவேற்றிக்காட்ட முடிந்தது. இவையெல்லாம், உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த உத்தரப் பிரதேச வளர்ச்சியைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் அகிலேஷ் தலைமையிலான அரசு மாற்றிக் காட்டியிருக்
கிறது என்று பரவலாகப் பாராட்டப்படுகிறது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, முதல்வர் அகிலேஷ் தன்னிச்சையாகச் செயல்பட முடியாத சூழல்தான் ஆரம்பம் முதல் காணப்பட்டது. பிரதமராக மன்மோகன் சிங்குக்கு இருந்தது போன்ற சிக்கல்கள் அகிலேஷுக்கும் இருந்தன. தந்தை முலாயம் சிங்கின் நம்பிக்கைக்குரிய மூத்த தலைவர்கள் பலரை அவர் தனது அமைச்
சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
2012 தேர்தலில் தனது தலைமையில் புதிய வளர்ச்சிப் பாதையில் உத்தரப் பிரதேசத்தை இட்டுச் செல்லப் போவதாக அகிலேஷ் யாதவ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடி
யாமல் அவருக்குப் பல நெருக்கடிகள், முட்டுக்கட்டைகள். ஆட்சி அதிகாரத்தால் பயன்பெறும் சமாஜவாதி கட்சி ஆதரவாளர்களை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. யாதவர்களின் கட்சி என்கிற அடிப்படை அடையாளத்தை விட்டுவிட முடியாததால், ஜாதி அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.
ஒருபுறம், கட்சிக்குப் புதியதொரு அடையாளத்தை ஏற்படுத்த முதல்வர் அகிலேஷ் விழையும்போது, இன்னொருபுறம் அவரது தந்தை முலாயம் சிங் யாதவும், சித்தப்பா சிவபால் சிங் யாதவும், ஜாதி அரசியலையும், கட்சியின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த சமூக விரோதிகளையும் ஒதுக்கத் தயாராக இல்லை. குற்றப்பின்னணி உள்ள ஒருவரை கட்சியின் முக்கிய பொறுப்பில் நியமிக்கத் தலைப்பட்டார் சிவபால் சிங் யாதவ். அதை தடுத்தார் அகிலேஷ்.
அடுத்த கட்டமாக, சிவபால் சிங் யாதவ் தேர்ந்தெடுத்த ஒருவரை தலைமைச் செயலராக நியமிக்கும்படி முலாயம் சிங் உத்தரவிட்டார். அதை அகிலேஷால் மறுக்க முடியவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் அந்த தலைமைச் செயலரையும் இரண்டு அமைச்சர்களையும் பதவியிலிருந்து அகற்றினார் முதல்வர் அகிலேஷ். இதற்கு எதிர்வினையாக, அகிலேஷைக் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகற்றித் தனது தம்பி சிவபால் சிங் யாதவை மாநிலத் தலைவராக அறிவித்தார் முலாயம் சிங்.
இப்போது தேசிய செயற்குழுவைக் கூட்டி முலாயம் சிங் யாதவ் அகற்றப்பட்டு அந்தப் பதவியில் முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சிவபால் சிங் யாதவும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அமர்சிங்கும் அகற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிர்வினையாக, முலாயம் சிங் யாதவின் ஒன்றுவிட்ட சகோதரர் ராம்கோபால் யாதவ் கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா, மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் ஆகியோரும் நீக்கப்பட்டிருப்பதாகவும் முலாயம் சிங் அறிவித்திருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் அகிலேஷ் பின்னால் அணிதிரண்டிருக்கிறார்கள். ஆனால், கட்சி?
77 வயது முலாயம் சிங் யாதவ் எதிர்பார்த்ததுபோல 2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமையவில்லை. இப்படியே போனால், 2017 சட்டப்பேரவைத் தேர்தலும் சாதகமாக அமையுமா என்பது சந்தேகம்தான். குடும்ப அரசியலின் முடிவு இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com