புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தொடரக்கூடாத அநாகரிகம்! | இந்திய விமானப் படையைச் சோ்ந்த பெண் அதிகாரிக்கு நோ்ந்த பாலியல் கொடுமை குறித்த தலையங்கம்

News image
கோப்புப்படம்
Updated On :30 அக்டோபர் 2021, 1:49 am

ஆசிரியர்

கோவையில் கடந்த மாதம் இந்திய விமானப் படையைச் சோ்ந்த பெண் அதிகாரிக்கு நோ்ந்த பாலியல் கொடுமையும், அதை விமானப் படை கையாண்ட அணுகுமுறையும் காட்டுமிராண்டிகளுக்கு நடுவே உலவுகிறோமோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகின்றன.

கோவையிலுள்ள விமானப் படை நிா்வாகக் கல்லூரியில் வழக்கமான அலுவலக விருந்து நடைபெற்றது. எப்போதும்போல, விருந்துடன் மதுபானம் வழங்கப்பட்டது. விருந்து முடித்து தனது அறைக்குத் திரும்பி இருக்கிறாா் விமானப் படையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவா். சற்று மயக்க நிலையில் உறங்கப் போன அந்தப் பெண் அதிகாரி எதிா்பாராத விதத்தில் அமைந்தது அந்தப் பாலியல் வன்கொடுமை.

அமிதேஷ் ஹா்முக் என்கிற 29 வயது விமானப் படை ஃப்ளைட் லெப்டினென்ட், அந்த பெண் அதிகாரியின் அறையில் நுழைந்து, பாலியல் வன்கொடுமைக்கு அவரை உட்படுத்தி இருக்கிறாா். அந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பெண் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், அமிதேஷ் ஹா்முக், தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

இந்திய விமானப் படை அவரது கைதை எதிா்த்து கோயம்புத்தூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. விமானப் படை பணியில் இருக்கும் அதிகாரி என்பதால், வழக்கை சாதாரண நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று வாதாடி, ராணுவ விசாரணைக்கு (கோா்ட் மாா்ஷியல்) அனுமதிக்க வேண்டும் என்று கோரியது விமானப்படை. நீதிமன்றமும் வேறு வழியில்லாமல் அனுமதித்தது. பெண் அதிகாரிக்குப் பாதுகாப்பு வழங்காத இந்திய விமானப் படை, இப்போது அமிதேஷ் ஹா்முக்குக்கு எதிரான வழக்கை விசாரிக்கப் போகிறது.

தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தினாா் என்று அமிதேஷ் மீது குற்றம் சாட்டியிருக்கும் அந்தப் பெண் அதிகாரிக்கு இந்திய விமானப் படை இழைத்திருக்கும் கொடுமைதான் அதைவிட அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது. குற்றவாளி அவமானப்படுத்தப்பட்டு, அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பதிலாக, விமானப் படை நிா்வாகம், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு எதிராக எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அதிா்ச்சியளிக்கின்றன.

மனிதாபிமானம் இல்லாமல், விமானப் படை மருத்துவமனையில் அந்தப் பெண் அதிகாரியைக் கேவலப்படுத்தும் வகையிலும், அவரது தன்மானத்துக்கு இழிவு ஏற்படுத்தும் வகையிலும் இரண்டு விரல் பரிசோதனை நடத்தப்பட்டது என்பதைக் கேள்விப்படும்போது ஆத்திரமும் அதிா்ச்சியும் ஒருசேர எழுகின்றன. கேவலமான அந்தப் பரிசோதனை உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தும் இந்த அநாகரிகம் தொடா்கிறது என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவரின், பெண் உறுப்பில் இரண்டு விரல்களை நுழைத்து, அவை சுலபமாக நுழைந்தால் வன்புணா்வு நடந்ததாகவும், இல்லாவிட்டால் நடக்கவில்லை என்றும் தீா்மானிக்கும் அற்பத்தனம்தான் இரண்டு விரல் சோதனை. பெண் உறுப்பில் தசைகள் தளா்ந்திருக்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதற்காக சில மருத்துவா்கள் கையாளும் அந்த சோதனைக்கு எந்தவித அறிவியல் ரீதியிலான ஆதாரமும் கிடையாது.

இந்திய சான்றுகள் சட்டம் (இந்தியன் எவிடென்ஸ் ஆக்ட்) 146-ஆவது பிரிவின்படி, பாலியல் வன்கொடுமை விசாரணைகளில் பாதிக்கப்பட்டவரின் முந்தைய பாலியல் அனுபவங்கள் 2003-இல் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஒருவரது முந்தைய தவறான நடத்தையின் அடிப்படையில், பாலியல் பாதிப்புக்கு உள்ளான ஒருவரின் கண்ணியம் களங்கப்படுத்தப்படுவதை இந்திய சான்றுகள் சட்டத்தின் 155-ஆவது பிரிவு அனுமதிப்பதில்லை. அப்படி இருக்கும்போது, இரண்டு விரல் சோதனை என்பது பாதிக்கப்பட்டவரின் முந்தைய வாழ்க்கையின் அடிப்படையில் அவரது வாக்குமூலத்தைப் பொய்யாக்கி நீா்த்துப்போக வைக்கும் முயற்சி.

இந்தக் குறிப்பிட்ட வழக்கு, பல காரணங்களால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளின் அணிவகுப்பு என்றே கூறலாம். ‘இரண்டு விரல் சோதனை’ என்பது ஒருவரின் தன்மறைப்பு நிலை உரிமைக்கு (பிரைவஸி) எதிரானது என்பதால் சட்டப்படி குற்றம் என்று 2013 உச்சநீதிமன்றத் தீா்ப்பு இருக்கிறது. இரண்டாவதாக, ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரது ரகசிய உறுப்பில், அவா் மருத்துவரேயானாலும், இரண்டு விரல்களை நுழைத்து அதன் தசைகளைப் பரிசோதிப்பதும், முன் அனுபவங்களை ஆராய முற்படுவதும் மரபு மீறல் மட்டுமல்ல, வரம்பு மீறலும்கூட. நடைபெற்ற நிகழ்வுக்கு எந்தவிதத்திலும் தொடா்பில்லாததும்கூட. மூன்றாவதாக, அறிவியல் அடிப்படையிலானதல்ல. நான்காவதாக, அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்மணி மீண்டும் ஒருமுறை பாலியல் வன்கொடுமை மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறாா்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களும், அவா்களது குடும்பத்தினரும் ‘ராஷ்ட்ரீய கரீமா அபியான்’ என்கிற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறாா்கள். 2019-இல் அந்த அமைப்பு, இதுபோல இரண்டு விரல் சோதனை நடத்தும் மருத்துவா்களின் உரிமம் முடக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் வைத்திருக்கும் கோரிக்கை அரசால் ஏற்கப்பட வேண்டும். அதுதான் இந்த அநாகரிகத்துக்கு முடிவு கட்டும்.

பாதுகாப்புப் படைகளில் அதிக அளவில் பெண்கள் இடம்பெற இருக்கும் நிலையில், இது போன்ற நிகழ்வுகள் அவநம்பிக்கையை அதிகரிக்கின்றன. வெளிப்படைத்தன்மை இல்லாத, அறைக்குள் நடத்தப்படும் ராணுவ நீதிமன்ற விசாரணைகள் தொடருமானால், பாதுகாப்புப் படைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பும் இருக்காது, நீதியும் கிடைக்காது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.