

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி, ஊராட்சித் தேர்தல்களிலும், அண்மையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல்களிலும் பாஜக அடைந்திருக்கும் வெற்றியின் மூலம் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமை மேலும் வலுப்பெற்றிருக்கிறது.
கடந்த மாதம் நடைபெற்ற 288 நகராட்சிகளுக்கான தேர்தலில் 207 நகராட்சிகளை பாஜக தலைமையிலான "மஹா யுதி' கூட்டணி கைப்பற்றியது என்பதுடன், 117 நகர்மன்றத் தலைவர்கள் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 53 நகராட்சிகளைக் கைப்பற்றி இருக்கிறது என்றால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை வெறும் 9 நகராட்சிகளை மட்டுமே பிடித்திருக்கிறது.
ஒருபுறம் பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரகப் பகுதிகளுக்கும் தனது செல்வாக்கை விரிவாக்கம் செய்திருக்கிறது என்றால், பல ஆண்டுகள் தொடர்ந்து கோலோச்சி வந்த காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனம் அடைந்திருப்பதை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வெளிப்படுத்தி இருக்கிறது.
மகா விகாஸ் அகாடி கூட்டணி வென்ற 44 நகராட்சிகளில், அதில் இடம்பெற்ற காங்கிரஸôல் 28 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. நகராட்சி, ஊராட்சித் தேர்தல்களில் மட்டுமல்ல, பிருஹன் மும்பை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது எந்த அளவுக்கு அந்தக் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்திருக்கிறது என்பதன் வெளிப்பாடு.
2022-இல் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்கள் நடந்திருந்தால் ஒருவேளை முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும். பிளவு சிவசேனையைப் பலவீனப்படுத்தியது மட்டுமல்லாமல், பாஜகவை வலுப்படுத்தி இருக்கிறது என்பதை இப்போதைய தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. நகராட்சி, ஊராட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து கூட்டணிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
கடந்த 20 ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த உத்தவ் தாக்கரேயும், அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ராஜ் தாக்கரேயும் பாஜகவையும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையையும் வீழ்த்த மீண்டும் இணைந்தனர். பிருஹன் மும்பை மாநகராட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஏற்பட்ட உத்தவ்-ராஜ் தாக்கரே கூட்டணியால் பாஜகவை எதிர்கொள்ள முடியவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாகப் பிளவுபடாத சிவசேனையின் கோட்டையாக விளங்கிய பிருஹன் மும்பை மாநகராட்சியில் உள்ள 227 வார்டுகளில் பாஜக 89 வார்டுகளிலும், ஷிண்டே சிவசேனை 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை 65 வார்டுகளிலும், ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
2017 தேர்தலில் 31 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், இந்த முறை 24 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஒருவேளை உத்தவ் தாக்கரே சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொடர்ந்திருந்தால், முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்திருக்கக்கூடும்.
தனித்துப் போட்டி என்கிற காங்கிரஸின் முடிவு, பிருஹன் மும்பை மாநகராட்சியில் அந்தக் கட்சியை மேலும் பலவீனப்படுத்தி இருக்கிறது. மாநகராட்சிகளுக்கான தேர்தலில், கூட்டணிகளில் மாற்றங்கள் பல ஏற்பட்டன. மாநில அரசில் இடம்பெற்று, துணை முதல்வராக இருக்கும் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், தனது சித்தப்பா சரத் பவாரின் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டும்கூட அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்திருக்கிறது.
29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பிருஹன் மும்பை மாநகராட்சி உள்பட 20-க்கும் அதிகமான மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியிருக்கிறது என்றால், 5 மாநகராட்சிகளை காங்கிரஸýம், ஷிண்டே சிவசேனை தாணேவையும், அஜீத் பவார் தேசியவாத காங்கிரஸ் அகல்யா நகரையும், சற்றும் எதிர்பாராத விதத்தில் ஒவைசியின் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி மாலேகானையும் கைப்பற்றி இருக்கின்றன.
49.7% வாக்குகளுடன் 29 மாநகராட்சிகளில் உள்ள 2,969 வார்டுகளில் 1,425 வார்டுகளை பாஜகவும், 399 வார்டுகளை ஷிண்டே சிவசேனையும், 324 வார்டுகளை காங்கிரஸýம் ,155 வார்டுகளை உத்தவ் சிவசேனையும், 124 இடங்களை முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியும் கைப்பற்றி இருக்கின்றன. மாநகராட்சித் தேர்தலில், சில மாநகராட்சிகளில் ஷிண்டே சிவசேனை தனித்தும், அஜீத் பவார் கூட்டணியில் இருந்து விலகி போட்டியிட்டதும்கூட, பாஜகவின் வெற்றிக்குக் காரணமாகி இருக்கின்றன.
பாஜக வலுப்பெற்றதால் வெற்றி அடைந்திருக்கிறது என்பதைவிட, எதிர்க்கட்சிகள் பலவீனப்பட்டிருப்பதால் தோல்வி அடைந்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே தலைநகர் தில்லியின் மாநகராட்சியைக் கைப்பற்றி இருக்கும் நிலையில், இப்போது ரூ.74,000 கோடி பட்ஜெட்டுடன் ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான பிருஹன் மும்பை மாநகராட்சியையும் பாஜக கைப்பற்றி இருக்கிறது.
எதிர்க்கட்சியாக உத்தவ் தாக்கரே சிவசேனை மும்பையில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருந்தாலும், சிவசேனையின் வருங்காலம் ஏக்நாத் ஷிண்டே சிவசேனைக்குத்தான் என்பதையும், காங்கிரஸ் வலுவிழந்து விட்டதையும், பவார் குடும்பத்தின் செல்வாக்கு சரிந்து விட்டதையும் சமீபத்திய மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.