கூடிக் கலையும் போலி உறவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு ஊடக வெளிச்சம் பெற்றதே தவிர, இரு நாட்டு உறவில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சர்வதேச நோக்கர்களின் கணிப்பு.

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published On :

அடிப்படை முரண்பாடுகளில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல், குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்கள் எதுவும் கையொப்பமாகாமல், வழக்கமான கூட்டறிக்கைகூட வெளியிடப்படாமல் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அமெரிக்க விஜயம் பரபரப்பாகப் பேசப்பட்டு முடிந்திருக்கிறது.

மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு ஊடக வெளிச்சம் பெற்றதே தவிர, இரு நாட்டு உறவில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் சர்வதேச நோக்கர்களின் கணிப்பு.

உலகின் இரண்டு முதன்மை வல்லரசுகளின் தலைவர்கள் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர் என்பதே மிகப் பெரிய வெற்றியாகவும், முக்கியமான சர்வதேச நிகழ்வாகவும் பார்க்கப்படுவதில் வியப்பில்லை. உலகின் பொருளாதாரச் சூழலும் உக்ரைன், மேற்காசியப் போர்களால் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையும் இந்தச் சந்திப்பின் எதிர்பார்ப்பை அதிகரித்தன.

குறைந்தபட்சம், இரு நாடுகளின் தலைவர்களும் ஏதாவது முக்கிய முடிவை அறிவிப்பார்கள் என்று உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் என்று நினைத்ததும் பொய்த்திருக்கிறது.

’ஏ.ஐ.' எனப்படும் செயற்கை நுண்ணறிவு, ’ரேர் எர்த்ஸ் மினரல்ஸ்' எனப்படும் அரியவகைக் கனிமங்கள், தொழில்நுட்பத் தட்டுப்பாடு மற்றும் பகிர்வு, தைவான் நிலைப்பாடு, ஈரான் பிரச்னை, வர்த்தகம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எந்தவொரு கருத்துவேறுபாடும் களையப்படவில்லை.

பத்தாண்டுகளுக்குப் பிறகான சீன அதிபரின் முதலாவது வெள்ளை மாளிகை விஜயம் நான்கு வாரங்களாக, அமெரிக்க ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வலம் வந்தது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும், இந்த விஜயத்துக்கு மிகுந்த முக்கியத்துவமும், விளம்பரமும் தரத் தயங்கவில்லை.

வழக்கத்துக்கு மாறாக மரபுகளைப் புறந்தள்ளி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மேரி லாண்டில் அமைந்த ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்துக்கு சென்றது குறித்து விவாதங்கள் எழுந்தன.

வேறெந்த உலக நாடுகளின் தலைவருக்கும் முன்னெப்போதும் அளிக்காத முக்கியத்துவத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபரான ஷி ஜின்பிங்குக்கு அளிக்க முற்பட்டார்.

அதிபர் ஷி ஜின்பிங்கை தாமாக முன்வந்து வெள்ளை மாளிகையைச் சுற்றிக் காட்டியதும், வெள்ளை மாளிகையின் தெற்குப் புல்வெளியில் அமைந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு அவரை அழைத்துச் சென்று காட்டியதும், அவற்றை ஊடகங்களில் ஒளிபரப்ப அதிபர் டிரம்ப் முனைப்புக் காட்டியதும் வேடிக்கையாக இருந்தது.

தனது தனி உபயோகத்துக்கான ஹெலிகாப்டருக்குள் அதிபர் ஷியை அழைத்துச் சென்று, தங்களது நெருக்கத்தை வெளிப்படுத்த முற்பட்டார் அதிபர் டிரம்ப்.

தனது இரண்டாவது முறை வெள்ளை மாளிகைப் பதவிக்காலத்தில், தனிப்பட்ட நட்புறவை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் நயதந்திரமாக மாற்றி இருக்கிறார் டிரம்ப். அதை வெளிச்சம் போடுவதன் மூலம் சர்வதேச அரசியல் நோக்கர்களுக்கு சில சமிக்ஞைகளை வழங்க முற்படுகிறார் அதிபர் டிரம்ப் என்று கருதத் தோன்றுகிறது.

அதனால், அதிபர் டிரம்ப் பலனடைந்தாரோ என்னவோ, நிச்சயமாக அதைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார் அதிபர் ஷி என்பது மட்டும் உண்மை.

சீனத் தலைவர்கள் எப்போதுமே இதுபோன்ற வெளியுலகப் பார்வையாளர்களுக்கான சமிக்ஞைகளையும், மரபு ரீதியிலான மரியாதைகளையும் பேச்சுவார்த்தை முடிவுகளுடன் தொடர்புபடுத்த அனுமதிப்பதில்லை.

இதனால் எல்லாம் சீனாவிடம் இருந்து எந்தவிதச் சலுகையையோ, அல்லது சமரசங்களையோ எதிர்பார்க்க முடியாது என்பதைக் கடந்தகால நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

அதிபர் டிரம்ப்பின் போலிப் பெருமிதங்களைப் புரிந்துகொண்ட அதிபர் ஷி, அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதில்தான் அவரது வெற்றி அடங்கியிருக்கிறது.

வர்த்தகப் போர் நிறுத்தத்தை மேலும் இரு மாதங்கள், அதாவது ஜனவரி 10-ஆம் தேதிவரை நீட்டிக்க இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டிருக்கின்றன.

இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைச் செயல்படுத்துவது, பரஸ்பரம் 3,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு வரிக் குறைப்பு செய்வது, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் மற்றும் நன்மைகள் குறித்து விவாதிக்க இரு தரப்பு அமைப்பை ஏற்படுத்துவது, வணிக ரீதியிலான பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முதலீட்டு வாரியம் நிறுவுவது உள்ளிட்ட சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அரிய வகைக் கனிமங்கள் மற்றும் முக்கியத் தாதுக்களின் விநியோகப் பற்றாக்குறை, ஹோர்முஸ் பிரச்னை, ஈரான் உறவு, ரஷிய எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட அடிப்படை முரண்பாடுகளில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அது தைவான் பிரச்னையானாலும், இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதியானாலும் நிலைமை மாற்றமில்லாமல் தொடரும் எனும்போது, குறிப்பிடும்படியான எந்த முடிவும் இரண்டு நாடுகளின் அதிபர்களாலும் எடுக்கப்படவில்லை என்பதைத்தான் இந்தச் சந்திப்பு தெரிவிக்கிறது.

இரண்டு தலைவர்களும் நவம்பர் மாதம் சீனாவின் பெய்ஜிங்கிலும், அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலும் மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள். அப்போதும், இப்போதுபோல மீண்டும் கைகுலுக்குவார்கள்; நட்புறவுடன் பேசிக் கலைவார்கள்; கூட்டறிக்கை இல்லாமல் பிரிவார்கள். அதையும் உலகம் வேடிக்கை பார்க்கும்!

மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று ஈத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.

குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

திருக்குறள் (எண் 800 ) அதிகாரம்: நட்பு ஆராய்தல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.