அண்ணா தொழில்நுட்ப பல்கலை: பொறியியல் பட்டம் பெற்றும் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டதற்கு பின் படிப்பை முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கொடுக்காமல்


அண்ணா பல்கலைக்கழகம் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டதற்கு பின் படிப்பை முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பட்டம் பெற்ற பிறகும் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தன. இந்தப் பல்கலைக்கழகங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்க ஜூலை 23-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
இது தொடர்பாக இயற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்தத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் கோயம்புத்தூர், திருநெல்வேலி, சென்னை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய ஐந்து இடங்களிலுள்ள 535 பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்ற பொறியியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.
திருச்சி, திருநெல்வேலி, சென்னை மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களிலுள்ள 12 உறுப்புக் கல்லூரிகளும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இந்த அறிவிப்புக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்களும் அமைக்கப்பட்டன.
இந்தத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த ஜனவரி, மே மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகமே தேர்வுகளை நடத்தியது. தேர்வு எழுதிய திருநெல்வேலி உள்ளிட்ட பல மண்டலங்களைச் சேர்ந்த மாணவர்கள் எவருக்கும் இதுவரை மதிப்பெண் சான்றிதழ் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியவில்லை.
சென்னையில் படித்த மாணவர்கள் தங்கள் பதிவை செய்து கொண்டதால் வேலைவாய்ப்பு பதிவு மூப்பில் தென் மாவட்ட பொறியியல் பட்டதாரிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வேலைக்காக நேர்முகத் தேர்விற்கு செல்லும் மாணவர்களும் சான்றிதழ் இன்றி வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். மேல் படிப்புக்கு செல்கின்ற போதும் சான்றிதழ் இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து திருநெல்வேலி மண்டல இயக்குநர் (பொறுப்பு) வீ. சுந்தரேஸ்வரன் கூறியது:
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் இருந்து சான்றிதழ்கள் வரவர படிப்படியாக வழங்கி வருகிறோம். இன்னும் எத்தனை பேருக்கு வழங்க வேண்டும் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நான் எதுவும் தனியாக முடிவு எடுக்க முடியாது என்றார் அவர்.
பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா உடனடியாக இதில் தலையிட்டு, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ்களை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...