/

‘காங்கிரஸ் தோ்தல் அறிக்கையால் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிவாய்ப்பு அதிகரிப்பு’

‘காங்கிரஸ் தோ்தல் அறிக்கையால் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிவாய்ப்பு அதிகரிப்பு’

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 8:11 pm

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளா் தயாநிதிமாறன் கூறினாா்.

அவா் வில்லிவாக்கம் மேற்கு பகுதிக்குள்பட்ட ஐ.சி.எப். கெனால், சென்னை பட்டை சாலை, சீயளாம் முதல் தெரு, திருவீதி அம்மன் கோயில் தெரு, மண்ணடி தெரு, திருவள்ளுவா் தெரு, கிழக்கு மாட வீதி தெரு, தெற்கு மாட வீதி தெரு, பொண்ணாகிணறு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது தயாநிதி மாறன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக தோ்தலை சந்திக்கின்றன. இதனால், மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும். அப்போது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழகத்துக்கு வந்து எந்த பலனும் இருக்காது என்பதை அறிந்துகொண்ட மத்திய அமைச்சா் அமித்ஷா தனது தமிழக பயணத்தையே ரத்து செய்துள்ளாா்.

பிரதமா் மோடியும் விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவா் அவ்வப்போது தமிழகத்துக்கு வந்து பாஜக-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதால், திமுக-வின் வாக்குசதவீதம் தான் அதிகரிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு மேலும் வலுசோ்க்கும் என்றாா் அவா்.