மே 13 - நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 96 தொகுதிகள் யார் பக்கம்?

மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற மாநிலங்கள், தொகுதிகள் நிலவரம் பற்றி...
இடாவா நகரில் மக்களவைத் தேர்தலில் அதிகாரம் யாருக்கு எனத் தீர்மானித்த மகளிர் விரல்கள்!
இடாவா நகரில் மக்களவைத் தேர்தலில் அதிகாரம் யாருக்கு எனத் தீர்மானித்த மகளிர் விரல்கள்!ANI

மத்தியில் அடுத்து ஆளவிருக்கும் அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப் பதிவு, இன்று மே 13 திங்கள்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது.

சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் ஆந்திரத்திலும் மற்றும் தெலங்கானாவிலும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிவுறும் நிலையில், இன்றுடன் தென் மாநிலங்களில் அனைத்திலும் மக்களவைத் தேர்தல் முடிவுக்கு வந்துவிட்டது.

இன்றைய நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 96 தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் - 49 தொகுதிகள் ஏற்கெனவே ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வசம் இருப்பவை. இவற்றைத் தக்கவைக்க முடியுமா, இழக்க வேண்டியிருக்குமா என்று நிச்சயமில்லாமல் இருக்கிறது ஆளும் கூட்டணி.

இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற உத்தரப் பிரதேசத்திலுள்ள 13 தொகுதிகளும் மகாராஷ்டிரத்தில் 11-ல் 9 தொகுதிகளும் மத்தியப் பிரதேசத்திலுள்ள 8 தொகுதிகளும் பிகாரிலுள்ள 5 தொகுதிகளும் தெலங்கானாவில் 17 தொகுதிகளில் 4 தொகுதிகளும் ஜார்க்கண்டில் 4-ல் 3 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 8-ல் 3 தொகுதிகளும் ஆந்திரத்தில் 25-ல் 3 தொகுதிகளும் ஒடிசாவில் 4-ல் ஒரு தொகுதியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் இருக்கின்றன.

ஆந்திரத்தில் கடந்த தேர்தலில் 22 தொகுதிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. இந்தத் தேர்தலில் ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருப்பதால் கூடுதலான தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறலாம் என்று பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது.

எனினும், ஆந்திரத்தில் சட்டப்பேரவைக்கும் சேர்ந்து தேர்தல் நடைபெற்றதால் இதன் தாக்கம் மக்களவைக்கு எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பதிலும் எதிரொலிக்கும் வாய்ப்பு அல்லது ஆபத்து இருக்கிறது.

கடந்த பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசத்தைத் தனித்தே நின்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தோற்கடித்தது. இந்த முறை பா.ஜ.க., ஜனசேனா ஆகியவற்றுடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைத்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா தன்னுடைய ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் அவரே. இரு கூட்டணிகளுக்கு இடையே இழந்தவற்றை மீண்டும் பிடிக்க நினைக்கிறது காங்கிரஸ்.

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் ஏற்கெனவே ஆட்சி செய்துகொண்டிருந்த பாரத ராஷ்டிர சமிதி மிகவும் வலுவிழந்திருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டது.

2019 தேர்தலில் தெலங்கானாவில் நான்கு தொகுதிகளில் மட்டுமே வென்ற பாரதிய ஜனதா கட்சி, தெற்கே சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகத்தையும் இழந்துவிட்ட நிலையில், இந்த முறை எப்படியாவது தெலங்கானாவில் கூடுதல் தொகுதிகளைப் பெற நினைக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து,  பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகத் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டார் காங்கிரஸ் முதல்வரான ரேவந்த் ரெட்டி.

இந்த நான்காம் கட்ட வாக்குப் பதிவிலும் இந்தியா கூட்டணியின் வசமிருப்பவை 11  தொகுதிகள் மட்டுமே. மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் 5, தெலங்கானாவில் 17 தொகுதிகளில் 3, ஜார்க்கண்டில் 4-ல் 1, ஒடிசாவில் 4-ல் 1, மகாராஷ்டிரத்தில் 11 தொகுதிகளில் ஒன்று.

மகாராஷ்டிரத்தில் அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ள நிலையில் – சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனை ஆகியவற்றுடன் காங்கிரஸும், இவ்விரண்டு கட்சிகளிலிருந்து விலகிவந்த ஷிண்டே, அஜித் பவார் அணிகளுடன் பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்துள்ளன - அதிகளவிலான தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என இந்தியா கூட்டணி நம்புகிறது.

இவையன்றி, நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற தொகுதிகளில் 35 தொகுதிகள் தேசிய அளவிலான இவ்விரு அணிகளிலும் இடம் பெறாத கட்சிகளின் வசம் இருப்பவை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – 22, பாரத ராஷ்டிர சமிதி – 9, பிஜு ஜனதா தளம்- 1, ஏஐஎம்ஐஎம் – 1. இவற்றில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் பாரத் ராஷ்டிர சமிதியும் இதே எண்ணிக்கையிலான தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியுமா? என்பது பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை.

ஜம்மு – காஷ்மீரில் வாக்குப் பதிவு நடைபெற்ற ஒரு தொகுதியின் எல்லைகள் ‘சகட்டுமேனிக்கு’ மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் யாருடைய தொகுதி என்று வரையறுத்துக் கூற முடியாது.

நான்காம் கட்டமாக நடைபெற்ற 96 தொகுதிகளின் வாக்குப் பதிவுடன் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 380 தொகுதிகளில் தேர்தல் முடிந்துவிட்டது. இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற தொகுதிகளில் ஆந்திரம், தெலங்கானா தவிர்த்து, உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிரத்தில் சரத் பவார், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி ஆகியோரின் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படும் பகுதிகள் இடம் பெற்றிருந்தன.

இன்னும் மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய மூன்று நாள்களில் 49, 58, 57 என மொத்தம் 164 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப் பதிவுகள் நடைபெற வேண்டியுள்ளது.

மீதியுள்ள 3 கட்டங்களில் பிகார், ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டீகர், ஜம்மு – காஷ்மீர், லடாக், தில்லி ஆகிய மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகளில் மட்டும்தான் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது.

மிக அதிக அளவாக உத்தரப் பிரதேசத்தில் 41 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 24 தொகுதிகளுக்கும் பிகாரில் 21 தொகுதிகளுக்கும் ஒடிசாவில் 17 தொகுதிகளுக்கும் மகாராஷ்டிரத்தில் 13 தொகுதிகளுக்கும் ஜார்க்கண்ட்டில் 10 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற வேண்டும்.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில் இன்றைய வாக்குப் பதிவும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, ரேவந்த் ரெட்டி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், மமதா பானர்ஜி ஆகியோரின் பலமும் பரிசோதிக்கப்படுவதாக இருக்கும்.

தவிர, நான்காம் கட்டத் தேர்தலின் – வாக்குப் பதிவின் – போக்கு அடுத்த கட்ட வாக்குப் பதிவுகளிலும் எதிரொலிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com