எழுத்தாளர், சமூக ஆர்வலர், கரூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றது மட்டுமல்லாது, ஆண்டுதோறும் தனது செயல்பாட்டு அறிக்கையை முகநூலில் பதிவிட்டு வருபவர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி. தனது தேர்தல் பிரசாரப் பயணத்துக்கு இடையே, தினமணிக்கு அவர் அளித்த நேர்காணல்...
மக்களின் மனநிலையும், தேர்தல் கள நிலவரமும் எப்படி உள்ளது?
திமுக அரசின் மீதும், தமிழக முதல்வர் மீதும் மக்களிடையே நன்மதிப்பு இருப்பதைக் காண முடிகிறது. நலத் திட்டங்கள் அனைத்தும், குக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்திருப்பதையும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு தொடர்பாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை குறித்தும், அதன் முடிவுகள் குறித்தும் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தது ஏன்?
என்னைப் பொருத்தவரை, என் மனதுக்குச் சரியெனப்படுவதை தவறு நடைபெறும்போதெல்லாம் குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம்தான். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்திலும் என்ன சொல்ல வேண்டுமோ, அதைச் சொன்னேன். இப்போது மீண்டும் அதைப் பற்றி பேச வேண்டியதில்லை. தேர்தல் முடிந்த பிறகு கட்சிக்குள் பேச வேண்டியவற்றை ஊடகங்களில் விவாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
மூன்று மாதங்களுக்கு முன்னரே குழு அமைத்தும் கூட்டணிப் பேச்சு தொடங்கி, வேட்பாளர் தேர்வு வரையில் காங்கிரஸ் கட்சியில் பெரிதும் காலதாமதம் ஏன்?
இப்போது தேர்தல் களத்துக்கு வந்துவிட்டோம். எனவே, நடந்து முடிந்தவற்றை மீண்டும் தோண்டிப் பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. பல்வேறு கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாக, ஒரே குடையின் கீழ் வரும்போது காலதாமதம் ஏற்படலாம். இப்போது, வலிமை பெற்ற அணியாக ஒருங்கிணைந்து களத்துக்கு வந்துவிட்டோம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இடையே இருந்த சகோதரத்துவ உறவில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறதே?.
ஊடகங்கள்தான் இதை மிகைப்படுத்துகின்றன. சமூக ஊடகத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டது மட்டுமன்றி, தொலைபேசியிலும் தமிழக முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார் ராகுல் காந்தி. தொலைபேசியில் அழைத்துப் பேசிய செய்தியை யாரும் பெரிதாக்கவில்லை; சமூக ஊடகத்தில் பதிவிட்டதை பூதாகரமாக்கிவிட்டனர். மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் இடையே உள்ள நட்பு எப்போதும்போல தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக, திமுக என மாறி, மாறி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் களம் காண்பதையே காங்கிரஸ் வழக்கமாக்கிவிட்டதே?
இப்போது தேர்தல் காலம் என்பதால், கூட்டணியின் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே சரியாக இருக்கும். மேலும், தமிழகத்தை பாஜக-விடமிருந்தும் அதன் கூட்டணியிடமிருந்தும் காப்பாற்றுவதே எங்களது ஒற்றை இலக்கு. தமிழக நலனையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில்கொண்டே நீண்ட காலமாக கூட்டணியில் தொடர்கிறோம்.
நீண்டகாலமாக திமுக கூட்டணியில் தொடர்வதால் காங்கிரஸ் தனது தனித்தன்மையை இழந்துவிடவில்லையா?
தேர்தல்தோறும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. தமிழகத்திலும் எங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தும் நிலைப்பாடு வரக் கூடும்.
திராவிடக் கட்சிகள் வருகைக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளதா?
ஒரு கட்சியின் வருகையால் மற்றொரு கட்சி பலவீனப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை ஏற்க முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை, செயல்திட்டம் உள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி பலமிக்கதாக உள்ளது. அதேபோல, திராவிடக் கட்சிகள் இல்லாத சில மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு உள்ளது. தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு 15 நாள்களே உள்ளதால், கட்சியின் பலம், பலவீனம் குறித்து பேசுவதற்கான நேரம் இதுவன்று.
தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்குச் செல்லும் எண்ணம் இருந்ததா? கூட்டணிப் பேச்சுவார்த்தை ஏதேனும் நடைபெற்றதா?
தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒருவிதமான கூட்டணிக்கு முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அதிகாரபூர்வமாக கட்சித் தலைமை அறிவிக்கும் முடிவே இறுதியானது. இந்த வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் திமுக-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான குழுவை அமைத்து எங்களது கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுவிட்டது. கூட்டணி தொடர்பான தனி நபர்களின் பேச்சுகளையோ, நடவடிக்கைகளையோ பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. கட்சித் தலைமையின் முடிவே அதிகாரபூர்வமானது.
தமிழகத்தில் தவெக வரவால் 2026 பேரவைத் தேர்தலில் நிலவும் நான்குமுனைப் போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என ஊகிக்க முடிகிறதா?
திமுக தலைமையில் தமிழகத்தில் தனக்கென்று உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம். நிச்சயமாக 200 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெறும். 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.
அதிமுக, பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த உங்களது பார்வை என்ன?
தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிரான மனநிலையே உள்ளது. அதை அதிமுக சுமக்க வேண்டியுள்ளது. இதேபோல, அதிமுக-வுக்கு எதிரான மனநிலையை பாஜக சுமக்க வேண்டியுள்ளது. இந்த இரு கட்சிகளையும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகள் அனைத்தையும் பாஜக-விடம் விட்டுக் கொடுத்துவிட்டது அதிமுக தலைமை. மறைந்த ஜெயலலிதா கையொப்பமிட முடியாது எனக் கூறிய திட்டங்கள் பலவற்றுக்கும் (உதய் மின் திட்டம் உள்பட) எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கையொப்பமிட்டது. தமிழகத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. பாஜக இடம்பெற்றுள்ள அதிமுக தலைமையிலான கூட்டணியைப் புறக்கணிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கியைப் பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றனவே?
ஜனநாயகத்தில் யாரும் கட்சி தொடங்கி நடத்த முடியும். இந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையே புதிய வரவாக தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கியுள்ளார். அந்தக் கட்சிக்கு இத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்பதை இப்போதே ஜோதிடம்போல கூற முடியாது. மே 4}ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போதே தவெகவின் உண்மையான வாக்கு வங்கி நிலவரம் தெரியவரும்.
நேர்காணல் ஆர். முருகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1984 : மூன்றாவது முறையாக முதல்வர் எம்ஜிஆர்!
மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

தேர்தல் 1977: எம்.ஜி.ஆர். சகாப்தம் தொடக்கம்!

தொகுதி அறிமுகம்: திருநெல்வேலி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

