அனல் பறக்கும் தேர்தல் களம்; களைகட்டும் வாக்கு வேட்டை!
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளுடன் மேற்கொள்ளும் வாக்கு வேட்டைகள் கவனத்தை ஈர்க்கின்றன.
சட்டப்பேரவைத் தேர்தல்
பிரதிப் படம்
சட்டப்பேரவைத் தேர்தல்
பிரதிப் படம்
ந. தமிழ்ச்செல்வன்
அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளுடன் மேற்கொள்ளும் வாக்கு வேட்டைகள் கவனத்தை ஈர்க்கின்றன.
களைகட்டும் தேர்தல் களம்...
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி:
வேலூர்: ப. கார்த்திகேயன் (திமுக), எஸ்.ஆர்.கே. அப்பு (அதிமுக), எம். வினோத்கண்ணன் (தவெக), ஆ. சோனியா (நாதக)
காட்பாடி: அமைச்சர் துரைமுருகன் (திமுக), வி. ராமு (அதிமுக), டாக்டர் எம். சுதாகர் (தவெக), திருக்குமரன் (நாதக)
அணைக்கட்டு: ஏ.பி. நந்தகுமார் (திமுக), த. வேலழகன் (அதிமுக), ஆர். வெல்முருகன் (தவெக), ரவிக்குமார் (நாதக)
மேலும்:
குடியாத்தம் (தனி): கே.பி. பிரதாப் (திமுக கூட்டணி - தேமுதிக), பரிதா புருஷோத்தமன் (அதிமுக), க. சிந்து (தவெக), இமலன் (நாதக)
கே.வி.குப்பம் (தனி): டாக்டர் ஆர். ராஜேஸ்வரி (திமுக), பூவை ஜெகன்மூர்த்தி (அதிமுக கூட்டணி - புரட்சி பாரதம்), இ. தென்றல் குமார் (தவெக), கலையெந்திரி (நாதக)
இவர்கள் தொகுதி மக்களை சந்தித்து தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் தேர்தல் திருவிழா போல களைகட்டியுள்ளது.
சாதனைகளை முன்வைக்கும் திமுக...
திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கடந்த 5 ஆண்டுக் கால ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரிக்கின்றனர். கல்வி, சுகாதாரம், பெண்கள் நலம், விவசாயம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை எடுத்துரைக்கின்றனர். மேலும், அதிமுகக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கு பலம் சேர்க்கும் என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர்.
அதிருப்தியை ஆயுதமாக்கும் அதிமுக...
மறுபுறம், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியை முக்கிய ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், நிறைவேறாத வாக்குறுதிகள் போன்றவற்றை முன்வைத்து பிரசாரம் செய்கின்றனர்.
குறிப்பாக, வேலூர் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைப்போம் என்ற வாக்குறுதியையும் அளித்து வருகின்றனர்.
மாற்று அரசியலை முன்வைக்கும் தவக, நாம் தமிழர்...
தவக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், திமுக–அதிமுக மாறி மாறி ஆட்சி செய்ததால் ஊழல் மற்றும் நிர்வாக குறைகள் தொடர்கின்றன என்று கூறி மாற்று அரசியலை முன்வைக்கின்றனர்.
விஜய் மற்றும் சீமான் ஆகியோரின் பிம்பம் மற்றும் அரசியல் அணுகுமுறையை நம்பியே இவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவனம் ஈர்க்கும் நூதன பிரசாரங்கள்...
வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இருசக்கர வாகனங்களில் சுற்றுப்பயணம், தேநீர் கடைகளில் மக்களுடன் உரையாடல், தாமே தேநீர் ஊற்றுதல், இறைச்சிக் கடைகளில் உதவுதல், முதியோரிடம் ஆசீர்வாதம் பெறுதல் போன்ற செயல்கள் தேர்தல் களத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...