

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் பயனடைய ஓபிசி-என்சிஎல் சான்றிதழ் பெறுவது அவசியம்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஓபிசி சான்றிதழ் என்பது, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான சான்றிதழ். அதாவது ஓபிசி பிரிவைச் சேர்ந்த நான் கிரீமிலேயர் அல்லாத பிரிவினர் என்று அர்த்தம்.
மத்திய கல்வி நிலையங்கள், அரசுப் பணிகள் போன்றவற்றில் இதற்கான இட ஒதுக்கீட்டைப் பெற ஓபிசி-என்சிஎல் சான்றிதழ் கட்டாயமாகிறது. இந்த சான்றிதழைப் பெற, ஒருவரது குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, ஓபிசி பிரிவில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பெற இந்த சான்றிதழ் வழி வகுக்கும்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்து, ரூ.8 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் பெறும் எவர் ஒருவரும் இந்த சான்றிதழைப் பெறலாம்.
அதுவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்து ரூ.8 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டினால், அவர்கள் கிரீமிலேயர் என வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இதற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பெற்றோர் மற்றும் விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் இயங்கும் அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று ஓபிசி-என்சிஎல் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். அல்லது வீட்டிலிருந்தே தமிழக அரசின் இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
இ-சேவை மையத்தில்..
தேவைப்படும் ஆவணங்கள் - புகைப்படம், முகவரிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு சென்றால், அவை ஸ்கேன் செய்து, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சான்றிதழ்கள் விண்ணப்பதாரரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
இதற்கு ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்பித்த ஒரு வார காலத்தில், சான்றிதழ் வழங்கப்படும். இது ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க...
www.tnsevai.tn.gov.in என்ற இணையதளம் சென்று சிட்டிசன் லாகின் என்பதை கிளிக் செய்யவும்.
இதில் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால், பயனர் பெயர், பாஸ்வேர்டு கொடுத்து உள் நுழையலாம். புதியவர் என்றால் புதிய லாகின் உருவாக்க வேண்டும்.
அதற்கு, ஒருவர் தன்னுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்து புதிய லாகின் உருவாக்கி, அதில் கொடுத்த செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்ய வேண்டும்.
மீண்டும் லாகின் முகவரியை பதிவு செய்து துறை ரீதியாக (Department Wise) என்பதில் வருவாய் துறை (Revenue Department) என்பதை தெரிவு செய்து உள் நுழையலாம். அதில் இரண்டாவது பக்கத்தில் உள்ள ஓபிசி சான்றிதழ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில், புரொசீட் என்பதை கிளிக் செய்து, அங்கு CAN உருவாக்க வேண்டும். ஏற்கனவே, சிஏஎன் வைத்திருப்பவர்கள் நேரடியாக அந்த எண்ணைப் பதிவு செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பிறகு, ஆதார் எண் கொடுத்து ஓடிபியை பதிவு செய்தால் அனைத்துத் தகவல்களும் பூர்த்தியான படிவம் ஒன்று சிஏஎன் எண்ணை அடிப்படையாகக் கொண்டு பூர்த்தியாகியிருக்கும். அதில், சாதி, தொழில், தாய் பணியாற்றும் விவரம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்ய வேண்டும். பிறகு, சப்மிட் செய்ய வேண்டும்.
அதன்பிறகு, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் உள்ளிட்டவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு, இதில் பதிவேற்ற வேண்டும். அதில் டாகுமென்ட் எண் என்ற இடத்தில், புகைப்படமாக இருந்தால் 1 என்றும், முகவரி சான்றிதழ் என்றால் 2 என்றும் மேலே இருக்கும் எண்ணைப் பதிவிட வேண்டும். பிறகு ஆவணங்களை பதிவேற்றலாம். அதில், ஒரு சுய சான்றளிப்பு ஆவணம் இருக்கும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து கையொப்பமிட்டு, பிறகு ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
பிறகு, ரூ.60 கட்டணத்தை செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒப்புகைச் சீட்டு ஒன்று வரும். அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு இதே இணையதளத்தில் செக் ஸ்டேட்டஸ் என்று இருக்கும். அதில் விண்ணப்பித்த எண்ணைப் பதிவு செய்து பார்த்தால், சான்றிதழ் தயாராகிவிட்டது என்று வரும். அதினை பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால், ஒரு சில நாள்கள் கழித்து மீண்டும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.