
1.9.1976: “மிஸா” கைதிகளுக்கு சில வசதிகள்: மத்திய மந்திரி தகவல்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

1.9.1976 - Dinamani
புதுடில்லி, ஆக. 31 - உள்நாட்டுப் பந்தோபஸ்துப் பராமரிப்புச் சட்டத்தின் (”மிஸா”வின்) கீழ்க் காவலில் உள்ளவர்களை அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நெருங்கிய உறவினர்களும் வாரத்துக்கு ஒருமுறை சந்திக்க அனுமதிக்க வேண்டும். விதிகளில் வேறுவிதமாக மாநில அரசு கூறியிருந்தாலொழிய இவ்வாறு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய உள் விவகார மந்திரி பிரம்மானந்த ரெட்டி தனது இலாகாவைச் சேர்ந்த பார்லிமெண்ட் மெம்பர்கள் ஆலோசனைக் குழுவில் இந்தத் தகவலைக் கூறினார்.
"மிஸா" கைதிகள் தங்கள் வக்கீல்களைச் சந்தித்துப் பேசவும் அனுமதிக்கப்படுகிறது. கைதிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குக் கடிதம் எழுதுவதை அனுமதிக்குமாறும் மாநில அரசுகளுக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. வக்கீல்களுக்கும் வருமான வரி சம்பந்தமான ஆலோசகர்களுக்கும், சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து காவலில் உள்ளவர்கள் எழுதும் கடிதங்களும் அனுமதிக்கப்படும்.
ஒரு காவல் கைதியை விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டால் அந்த முடிவைச் செயல்படுத்துவதில் காலதாமதம் இருக்கக்கூடாது என்றார் அவர், காவல் கைதிகளின் பிள்ளைகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறுவது தவறு என்றும் அவர் கூறினார்.
அரசியல் பழிவாங்குவதற்காக "மிஸா" கண்டபடி பிரயோகிக்கப்படுகிறது என்ற புகாரையும் அவர் மறுத்தார்.
த.நா. சாகுபடியாளரைப் பாதுகாக்க ராஷ்டிரபதி புதுச்சட்டம்
சென்னை, ஆக. 31 - 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை பயிரிடும் சாகுபடியாளரை அவர்கள் பயிரிடும் நிலங்களிலிருந்து வெளியேற்றுவதினின்றும் பாதுகாப்பதற்கான சட்டமொன்றை ராஷ்டிரபதி பிறப்பித்துள்ளாரென்று தமிழ்நாடு அரசின் விசேஷ கெஜட் அறிவிக்கிறது.
இந்தச் சட்டத்துக்கு ராஷ்டிரபதி 29ஆம் தேதியன்று அங்கீகாரம் அளித்தார். அதையடுத்து 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமியற்றல் அதிகாரமளிப்புச் சட்டத்தின் 3வது பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் இந்தச் சட்டத்தை நேற்று பிறப்பித்தார்.
1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் சாகுபடியாளர் அகற்றப்படுவதனின்றும் பாதுகாப்பு அளிக்கும் சட்டம் என்று அழைக்கப்படும் இது, தமிழ் நாடு மாநிலம் பூராவிலும் அமலாகும். இது 1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16, முதலே அமலில் இருப்பதாகக் கருதப்படும். 1977 ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை (அத்தேதி உள்பட) அமலில் இருக்கும் என்று சட்டம் கூறுகிறது. ...
Summary
1.9.1976: Certain facilities for MISA prisoners: Union Minister’s statement.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


