

புதுடில்லி, ஜன. 7 - நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் அமலாக்கப்பட்டதால் 2.3 கோடி குழந்தைகளின் பிறப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்று சுகாதார மந்திரி டாக்டர் கரண்சிங் இன்று ராஜ்ய சபையில் கூறினார்.
ஆனால் இது போதுமானதல்ல என்றும் திட்டத்தை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் திரு. சிசோடியாவிடம் மந்திரி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் 1000க்கு ஒருவர் வீதம் பிறப்பு விதிதத்தைக் குறைப்பது வரும் ஆண்டுக்குள்ள குறியிலக்கு என்றும் பின்னர் படிப்படியாக 1000க்கு 30 பேர் வீதம் பிறப்புவிகிதம் குறைக்கப்படுமென்றும் மந்திரி கூறினார்.
தேசிய அடிப்படையில் குடும்பக்கட்டுப்பாட்டை கட்டாயமாக்க சட்டமியற்றுவது பற்றி அரசு சிந்திக்கவில்லை என்றார். இதனால் பல கஷ்டங்கள் விளையும் என்றார். மத்திய அரசு படிப்படியாகச் செல்வதாகவும் அந்த நடவடிக்கைகள் பலன் தராவிடில் அரசு சட்டமியற்றுதலைப் பரிசீலிக்கக்கூடுமென்றும் கூறினார். ...
... ஜனத்தொகைப்பிரச்னை பற்றி பாடப்புத்தகங்களில் எழுதுவதற்காகவும் ஏற்பாடு செய்வதாக மந்திரி கூறினார்.
புதுடில்லி, ஜன. 7 - புது மாதிரியான விபத்து, பிணி இன்ஷ்யூரன்ஸ் ஒன்று கொண்டுவர இந்திய பொது இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.
18-லிருந்து 60 வயது வரையுள்ள எவரும் வருஷம் ரூ. 12 மட்டும் கொடுத்து இந்த இன்ஷ்யூரன்ஸில் சேர்ந்து கொள்ளலாம். இந்த நபர்கள் விபத்தில் உயிர் இழந்தாலோ, இரு கண்களையும் அல்லது கைகளையும் அல்லது கால்களையும் இழந்து நிரந்தர அங்கஹீனர்களானாலோ ரூ. 75000 நஷ்டஈடு கொடுக்கப்படும். ஒரு கண் அல்லது கை அல்லது கால் இழந்தால் இதில் பாதித்தொகை நஷ்டஈடு கொடுக்கப்படும்.
பிணிவுற்றோர் விஷயத்தில் உண்மை வைத்திய செலவுகள் வருஷத்திற்கு ரூ. 150 வரை கொடுக்கப்படும்.
நிரந்தர நோயாளிகள் இந்த இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முடியாது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நபர் ஒரு இன்ஷ்யூரன்ஸ்தான் எடுத்துக் கொள்ளலாம். ...
புதுடில்லி, ஜன. 7 - வட எல்லையில் இந்திய பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து விழிப்புடனேயே இருக்கின்றன என்று மக்கள் சபையில் தற்காப்பு மந்திரி பன்ஸிலால் இன்று உறுதியளித்தார்.
நமது வட எல்லையில் லட்சக்கணக்கான சீனத்துருப்புகள் நிறுத்தப்பட்டிருப்பதாக உள்ள செய்திகள் குறித்து அர்ஜுன சேதி கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மத்திய மந்திரி இவ்வாறு பதிலளித்தார்.
“பத்திரிகைச் செய்திகளை சர்க்காரும் பார்த்தது. ஆனால் எந்த தகவலும் வெளியிடுவது பொதுஜன நலனுக்கு உகந்ததில்லை” என்று பன்ஸிலால் கூறினார்.
“நமது எல்லைகளை நாம் ஜாக்கிரதையுடன் கண்காணித்து வருகிறோம். கவலை கொள்வதற்கான காரணமில்லை” என்று மந்திரி உறுதியளித்தார்.
சீனாவின் எல்லை மீறல்கள் பற்றி பன்ஸிலால் குறிப்பிடுகையில், 500 மீட்டர் இந்திய எல்லைக்குள் பதுங்கியிருந்த சீனரால் 4 இந்திய பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்ட அக்டோபர் 20 (ஆம் தேதி) சம்பவம் தவிர சீனாவுடனான நமது எல்லையில் குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவுமில்லை என்றார். ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.