மும்பை, ஜன.8: மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் கடுமையான சரிவு காணப்பட்டது. மும்பை சந்தையில் 817 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையில் 229 புள்ளிகளும் சரிந்தன. இதனால் மும்பை பங்குச் சந்தை 20 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழாக அதாவது 19,691 புள்ளியாக சரிந்தது. தேசிய பங்குச் சந்தையில் ஆறாயிரம் புள்ளிகளுக்கு கீழாக 5,904 புள்ளிகளாகக் குறைந்தது.
டிசம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்கம் 18.32 சதவீதமாக உயர்ந்தது. இதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற அச்சம் பரவலாக எழுந்தது.
இதுவரை 6 முறை வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ஜனவரி இறுதியில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக பங்குச் சந்தையில் பெரும்பாலான துறைகளின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதனால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத உணவுப் பணவீக்கம் மிக அதிக அளவில் உயர்ந்தது. வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 80 வரை உயர்ந்தது.
விலையைக் கட்டுப்படுத்த இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக காய்கறிகளின் ஒட்டுமொத்த விலை 59 சதவீதம் உயர்ந்தது.
அத்தியாவசிய பொருள் விநியோகத்தில் நிலவும் இடையூறுகளை அகற்றுமாறு மாநில முதல்வர்களை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொள்ளும் அளவுக்கு விலை உயர்வு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிடுவதென்ற முடிவை அமைச்சரவைக் குழு எடுக்க தாமதம் ஆனதும் உர நிறுவனப் பங்கு விலை சரிவுக்குப் பிரதான காரணமானது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக கட்டுமானம், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
லண்டனில் உள்ள உலோக சந்தையில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலை காரணமாக உலோக நிறுவனங்களான டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன.
அதேசமயம் நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி பற்றாக்குறை 890 கோடி டாலராக அதிகரித்ததும் பங்குச் சந்தை பாதிப்புக்கு காரணமாக இருந்தது.
ஏசிசி 8%, பார்தி ஏர்டெல் 8%, பிஹெச்இஎல் 7% அளவுக்கு சரிவைச் சந்தித்தன. சிப்லா, டிஎல்எப், ஹெச்டிஎப்சி பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 2 சதவீதம் சரிந்தது.
ஆட்டோமொபைல் துறையில் பஜாஜ் ஆட்டோ, ஹீரோ ஹோண்டா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுஸýகி, டாடா மோட்டார்ஸ் ஆகியன சரிவைச் சந்தித்தன. உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களான ஆம்டெக் ஆட்டோ, அப்பல்லோ டயர்ஸ், பாரத் ஃபோர்ஜ் ஆகியன நிறுவனப் பங்குகளின் விலையும் சரிந்தன.
வங்கித் துறை பங்குகளில் ஆக்ஸிஸ் வங்கி பங்கு விலை 13%, ஹெச்டிஎப்சி வங்கி பங்கு 7.5%, ஐசிஐசிஐ வங்கி 7.4%, எஸ்பிஐ 3.9% அளவுக்கு சரிந்தன.
கட்டுமான நிறுவனங்களில் ஆக்ருதி பங்கு விலை 10%, டிஎல்எப் 7%, ஹெச்டிஐஎல் 6%, இண்டியாபுல்ஸ் 5% அளவுக்கு சரிந்தன.
3எம் இந்தியா பங்கு விலை மிக அதிகபட்சமாக 22%, அபான் ஆப்ஷோர் 15%, ஆக்ருதி சிட்டி 13%, ஏகே கேபிடல் 22% அளவுக்கு சரிவைச் சந்தித்தன.