அரசமைப்புச் சட்டம் குறித்து சர்ச்சை கருத்து: மக்களவையில் மன்னிப்புக் கேட்டார் ஹெக்டே

இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்தும், மதச்சார்பின்மை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் அனந்த் குமார்
Updated on
1 min read

இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்தும், மதச்சார்பின்மை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே மக்களவையில் வியாழக்கிழமை மன்னிப்புக் கேட்டார்.
முன்னதாக, கர்நாடகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'மக்கள் தங்கள் மதத்தின் பெயரைக் கூறி தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களது தந்தை பெயர் தெரியாதவர்கள்தான், தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு சுய அடையாளமும் கிடையாது. தன்னைப் பெற்றவர் யார் என்பதும் தெரியாது' என்று தெரிவித்தார். தொடர்ந்து அரசமைப்புச் சட்டம் குறித்துப் பேசிய அவர், 'அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காகவே நாம் இங்கு கூடியுள்ளோம். அது விரைவில் மாற்றி அமைக்கப்படும்' என்றார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை எதிரொலித்தது. ஹெக்டே தனது பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், மக்களவை வியாழக்கிமை மீண்டும் கூடியபோது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இப்பிரச்னையை மீண்டும் எழுப்பினார். அப்போது, இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஹெக்டே பேசுவார் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ஹெக்டே, 'நமது நாட்டின் மீதும், அரசமைப்புச் சட்டத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதேபோல அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரை அவமதிக்கும் வகையில் நான் பேசினேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டின் குடிமகனாக அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட வேண்டுமென்று நான் நினைத்து இல்லை' என்றார்.
இதையடுத்து, ஹெக்டே தனது பேச்சுக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதையடுத்து குறிக்கிட்டுப் பேசிய சுமித்ரா மகாஜன், 'அம்பேத்கரை அவமதித்ததாக யாரும் குற்றம்சாட்டவில்லை. நீங்கள் ஒரு விஷயத்தைப் பேசியுள்ளீர்கள். இது சிலருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது என்றால் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அதனால் உங்கள் மதிப்பு குறைந்துவிடாது' என்று ஹெக்டேவிடம் கூறினார். இதன் பிறகு, 'கர்நாடகத்தில் நான் பேசியது தவறான பொருள் தரும் வகையில் திரித்துக் கூறப்பட்டுள்ளது. அதனால் யாருக்கும் மன வருந்தம் ஏற்பட்டது என்றால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்ள நான் தயங்கவில்லை' என்றார்.
அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மக்களவையில் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com