இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், ஒளரங்காபாதில் 3 நாள்கள் தங்கியிருந்து, உலகப் பாரம்பரியச் சின்னங்களான அஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்தார்.
அதற்காக, அவர் மும்பையிலிருந்து ஒளரங்காபாதுக்கு விமானம் மூலம் சனிக்கிழமை இரவு வந்தார்.
எனினும், அவரது வருகையை முன்கூட்டியே அறிந்துகொண்ட முஸ்லிம் அமைப்பினர், தஸ்லிமா ஒளரங்காபாத் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தஸ்லிமா நஸ்ரீன் தங்குவதாக இருந்த விடுதி முன்பும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து, நகரில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக அவரைத் திரும்பச் செல்லும்படி கேட்டுக் கொண்டோம்.
அதற்கு சம்மதம் தெரிவித்த தஸ்லிமா, மீண்டும் மும்பை திரும்பிச் சென்றார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தஸ்லிமா நஸ்ரீன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒளரங்காபாத் விமான நிலையத்தில் அகில இந்திய மஜ்லீஸ் இட்டெஹாதுல் முஸ்லிமின் கட்சி எம்எல்ஏ இம்தியாஸ் ஜலீலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஒளரங்காபாத் மத்திய தொகுதி எம்எல்ஏ-வான இம்தியாஸ் ஜலீல் கூறுகையில், தனது நூல்கள் மூலம் தஸ்லிமா நஸ்ரீன் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களின் மத உணர்வைப் புண்படுத்தியுள்ளதால், அவரை நகருக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றார். முற்போக்கு எழுத்தளரான தஸ்லிமா நஸ்ரீனின் உயிருக்கு வங்கதேசத்தில் மத அடிப்படைவாதிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, அவர் கடந்த 1994-ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
ஸ்வீடன் குடியுரிமை பெற்றிருந்தாலும், அவர் கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்தியாவில் அவருக்குக் குடியுரிமை வழங்கப்படவில்லை என்றாலும், தொடர்ச்சியாக அவரது நுழைவு இசைவு (விசா) புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தஸ்லிமா நஸ்ரீனுக்கான விசாவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்தது நினைவுகூரத்தக்கது.