ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைவு: பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமல்ல
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது காரணமல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் குறைந்ததற்கு, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது காரணமல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மத்தியில் பாஜக ஆட்சியமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதற்கும், கடந்த ஆண்டு புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் மத்திய அரசின் நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அதற்கு சர்வதேச அளவிலான பொருளாதார மந்த நிலை போன்ற பல்வேறு காரணங்கள் உள்ன. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே, மொத்த உள்நாட்டு உற்பத்தி இறங்குமுகத்தில்தான் இருந்து வந்தது. 7 முதல் 8 சதவீதம் வரையிலான வளர்ச்சி விகிதம் என்பது, சர்வதேச அளவில் மிகச் சிறந்ததும், இந்திய அளவில் மிக நியாயமானதும் ஆகும்.
சவால்கள்: வங்கிகளில் வாராக் கடன் பிரச்னையைத் தீர்ப்பதும், தனியார் துறையில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதும் அரசின் முன் உள்ள முக்கியமான சவால்களாகும்.
நட்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனத்தை தனியார் மயமாக்குவது குறித்து ஏற்கெனவே நீதி ஆயோக் தனது பரிந்துரைகளை வழங்கிவிட்டது. இந்த விவகாரம் குறித்து பொது விமானப் போக்குவரத்துத் துறைதான் முடிவு செய்ய வேண்டும் என்றார் அருண் ஜேட்லி.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2016-17-ஆம் நிதியாண்டின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் குறைவான வளர்ச்சி விகிதமாகும்.
கணிப்பு நிஜமாகிவிட்டது
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்திக்கும் என்ற தனது கணிப்பு தற்போது உண்மையாகிவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரும்பப் பெற்றது. இதன் காரணமாக, 2016-17-ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் (ஜனவரி - மார்ச்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.1 சதவீதமாக குறைந்தது. இது, மூன்றாம் காலாண்டில் 7 சதவீதமாக இருந்ததாக மத்திய புள்ளியியல் துறை புதன்கிழமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்து தாம் முன்பே கணித்திருந்தது நிஜமாகிவிட்டதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 முதல் 1.5 சதவீதம் வரை சரியும் என அப்போதே நான் கணித்து தெரிவித்தேன். அது, தற்போது நிஜமாகிவிட்டது. 2016-ஆம் ஆண்டிலேயே நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இதனை மேலும் மோசமாக்கிவிட்டது என அந்தப் பதிவில் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசே காரணம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவைக் கண்டுள்ளதற்கு மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கொல்கத்தாவில் வியாழக்கிழமை கூறியதாவது:
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை தொடக்கம் முதலே நான் எதிர்த்து வந்தேன். அந்த நடவடிக்கையால் வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவை வீழ்ச்சியடையும் என்று அச்சம் தெரிவித்து வந்தேன்.
எனது கணிப்பு தற்போது சரியாகிவிட்டது. கடந்த நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 7.9 சதவீதமாக இருந்தது. அதாவது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக ஏறத்தாழ 2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதளபாதாளத்தை நோக்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. விவசாயமும், அமைப்பு சாரா தொழில்களும் நலிந்துவிட்டன.
நாட்டு மக்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? என்று மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...