இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை: ஜூன் 15-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 15-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை: ஜூன் 15-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை
Published on
Updated on
2 min read

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 15-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.

மாடுகளை இறைச்சிக் கூடங்களுக்கு விற்கத் தடை விதித்து மத்திய அரசு கடந்த மாத இறுதியில் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசின் இந்த உத்தரவைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
உச்ச நீதிமன்றத்தில் மனு: இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்துல் ஃபகீம் குரேஷி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மத்திய அரசின் உத்தரவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை, வாழ்வதற்கான உரிமை, மத வழக்கங்களுக்காக விலங்குகளைப் பலியிட வழங்கப்பட்டுள்ள உரிமை, உணவு உரிமை ஆகியவற்றைப் புறக்கணித்துவிட்டு மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கும்: மாட்டிறைச்சி தொழிலைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், மத்திய அரசின் உத்தரவை கடைபிடிக்கப்போவதில்லை என்று கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா, கர்நாடகம் ஆகிய மாநில அரசுகள் கூறியுள்ளன.
வயது முதிர்ந்த மாடுகளை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தால் அவற்றை வளர்க்கும் விவசாயிகள் பொருளாதாரரீதியில் பாதிக்கப்படுவார்கள். அவற்றுக்கு உணவு அளிக்க முடியாவிட்டால், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் அவர்கள் மீது பாயும். மேலும், பசுக்காவலர்கள் என்று கூறப்படுபவர்களால் மாடு வளர்ப்பவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாவார்கள். எனவே, மத்திய அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
ஜூன் 15-ல் விசாரணை: இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷண், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீதான விசாரணை ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
தடைவிதிக்க கேரள நீதிமன்றம் மறுப்பு: இதனிடையே, பசுக்களை இறைச்சிக் கூடங்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
கேரளத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க கேரள உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து, அடுத்த கட்ட விசாரணையின்போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்ட நீதிபதி சுரேஷ் குமார், வழக்கு விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக, மத்திய அரசு தடை விதித்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வார காலம் தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com