காஷ்மீரில் ராணுவ அதிகாரி கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்
காஷ்மீரில் இளம் ராணுவ அதிகாரி ஒருவரைக் கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.


காஷ்மீரில் இளம் ராணுவ அதிகாரி ஒருவரைக் கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், விடுப்பில் சென்றிருந்த ராணுவ அதிகாரியை பயங்கரவாதிகள் கொலை செய்திருப்பது காஷ்மீரில் மட்டுமன்றி தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் ராணுவ அதிகாரி: காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் உமர் ஃபயாஸ் (23) கடந்த டிசம்பர் மாதம்தான் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். ஜம்முவின் அக்னூர் பகுதியில் பணியாற்றி வந்த அவர், உறவினர் இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்காக முதல்முறையாக விடுப்பு எடுத்தார்.
ஆயுதம் எதுவுமில்லை: தெற்கு காஷ்மீரின் சோஃபியான் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார். அன்று இரவு சுமார் 6 பயங்கரவாதிகள் திருமண வீட்டுக்குள் புகுந்து உமர் ஃபயாஸைக் கடத்திச் சென்றனர். திருமணத்துக்கு வந்திருந்ததால் அவர் ஆயுதங்கள் எதையும் எடுத்து வரவில்லை. குறைந்தபட்சம் கையில் துப்பாக்கியாவது இருந்திருந்தால் பயங்கரவாதிகள் அவரைக் கடத்தியிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.
இந்நிலையில், துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் அவரது உடல் சோஃபியான் நகரின் மற்றொரு பகுதியில் புதன்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. பயங்கரவாதிகள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, உடலை வீசி எறிந்துச் சென்றுள்ளனர்.
தண்டிக்கப்படுவார்கள்... இது குறித்து ராணுவத் தரப்பில் கூறப்பட்டதாவது: ஆயுதம் எதுவும் இல்லாமல் உறவினரின் திருமணத்தில் பங்கேற்கச் சென்ற இளம் ராணுவ அதிகாரியை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். அந்த பயங்கரவாதிகள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. ஃபயாஸின் தியாகத்துக்கு ராணுவத் தரப்பில் வீர வணக்கத்தை செலுத்துகிறோம். அவரது குடும்பத்துக்கு ராணுவம் துணை நிற்கும். இத்தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்: காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் ராணுவம், காவல் துறையில் சேரக் கூடாது என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில், பணியில் சேர்ந்து 5 மாதங்களே ஆன இளம் ராணுவ அதிகாரியை பயங்கரவாதிகள் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆயுதங்கள் இல்லாமல் இருந்த ராணுவ அதிகாரியை பயங்கரவாதிகள் கடத்திக் கொலை செய்தது கோழைத்தனமான செயல். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராணுவத்தில் பணியாற்றியதன் மூலம் காஷ்மீர் இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
- பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி
திருமண வீட்டுக்குச் சென்ற இளம் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. பயங்கரவாதிகளின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி
ராணுவ அதிகாரி உமர் ஃபயாஸ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த சோகத்தையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது.
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ராணுவ அதிகாரி ஃபயாஸின் மறைவால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகத்தை ஒட்டுமொத்த தேசமும் பகிர்ந்து கொள்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயுதம் ஏதுமின்றி இருந்த இளம் ராணுவ அதிகாரியை சுட்டுக்கொன்றதன் மூலம் பயங்கரவாதிகள்தான் தோல்வியடைந்துள்ளனர். ஃபயாஸ் எப்போதும் அனைவரது மனத்திலும் நிலைத்திருப்பார்.
- காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி

ராணுவ அதிகாரி உமர் ஃபயாஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...