செல்லரித்த காங்கிரஸை அப்புறப்படுத்துங்கள்: ஹிமாசலில் மோடி பேச்சு

மகாத்மா காந்தியும், பல சுதந்திரப் போராட்ட வீரர்களும் இருந்த காங்கிரஸ் கட்சி எப்போதோ மறைந்துவிட்டது;
ஹிமாசலப் பிரதேச மாநிலம் காங்க்ராவில் பாஜக சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.
ஹிமாசலப் பிரதேச மாநிலம் காங்க்ராவில் பாஜக சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.
Updated on
2 min read

மகாத்மா காந்தியும், பல சுதந்திரப் போராட்ட வீரர்களும் இருந்த காங்கிரஸ் கட்சி எப்போதோ மறைந்துவிட்டது; இப்போதுள்ள ஊழல், வாரிசு அரசியலால் செல்லரித்துப் போன காங்கிரஸ் கட்சியை அப்புறப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு, காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள காங்ரா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஊழலை தங்கள் கட்சி ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று கூறியுள்ளது. ஆனால், காங்கிரஸ் சார்பில் இந்த மாநில முதல்வராக இருப்பவர் (வீரபத்ர சிங்) ஊழல் வழக்கில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டு, இப்போது ஜாமீனில் வெளியே உள்ளார். ஆனால், அவர் ஊழலுக்கு எதிராக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். சிறு குழந்தை கூட காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை நம்பாது. காங்கிரஸ் இப்போது நகைச்சுவையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டோக்கா லாம் விவகாரத்தை மையமாக வைத்து இந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் (ராகுல் காந்தி,) சீனத் தூதரைச் சந்தித்து, எல்லையில் நிலவும் பிரச்னை குறித்து கேட்டுத் தெரிந்து கொள்கிறார். மத்திய அரசிடம் இது தொடர்பாக விவரம் கேட்க அவர் விரும்பாதது ஏன் என்று தெரியவில்லை. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வருவதை அவர் மறந்துவிட்டரா? என்று எண்ணத் தோன்றுகிறது.
அவரது (ராகுல்) குடும்பத்தைச் சேர்ந்த பலர் இந்தியப் பிரதமராக இருந்துள்ளனர். எனவே, ஆள்வதற்காகப் பிறந்த வம்சத்தில் பிறந்தவர் என்றே அவர் நினைத்துக் கொள்கிறார். நமது நாட்டு எல்லைப் பிரச்னை குறித்து அண்டை நாட்டுத் தூதரிடம் பேசியதன் மூலம் இந்திய அரசைத் தேர்வு செய்த கோடிக்கணக்கான மக்களை அவர் அவமதித்துள்ளார்.
மகாத்மா காந்தியும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை. இப்போது இருப்பது ஊழல்களாலும், வாரிசு அரசியலாலும் செல்லரித்துப் போன காங்கிரஸ். எனவேதான், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜக உறுதிபூண்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தில் கைகோத்து செயல்பட்டு வருகின்றனர். நாட்டில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவதுபோல, தேர்தலின்போது அந்தப் பழைய கட்சியை (காங்கிரஸ்) மக்கள் படிப்படியாக விலக்கி வருகின்றனர். தங்களை மக்கள் ஏன் ஆட்சியில் இருந்து நீக்கினார்கள் என்பது குறித்து காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறப்போவது உறுதி. ஏனெனில், மத்திய அரசு இந்த மாநிலத்துக்கு செய்து வரும் நற்பணிகள் மக்கள் அனைவருக்கும் தெரியும். மாநிலத்தில் ஊழல் ஆட்சியை அகற்றிவிட்டு பாஜகவின் நல்லாட்சியை ஏற்படுத்த இந்தத் தேர்தலை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மோடி.
ஹிமாசலப் பிரதேச பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com