பள்ளியில் சிறுவன் பிரதியுமனை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தனது தந்தை மற்றும் சில சாட்சிகள் முன்னிலை 11-ஆம் வகுப்பு மாணவர் ஒப்புக் கொண்டார். இத்தகவலை சிறார் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சிபிஐ தெரிவித்துள்ளது.
தில்லி அருகே குருகிராமில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் பிரதியுமன் தாக்கூர் (7) கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.
பிரதியுமனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்ததாக அந்தப் பள்ளி பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் அசோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீஸ் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில், வழக்கில் திடீர் திருப்பமாக அதே பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்னர்.
தேர்வுகள் தள்ளிப் போக வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதியுமனை கொலை செய்ததாக அந்த மாணவர் ஒப்புக் கொண்டார். கொலை செய்த மாணவர், சிறார் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் சிறார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பிரதியுமனைக் கொலை செய்ததை தனது தந்தை, சில சாட்சிகள் முன்னிலையில் அந்த 11-ஆம் வகுப்பு மாணவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதாக என்பது குறித்து அந்த மாணவர் விசாரிக்க வேண்டியுள்ளது. மேலும், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை வாங்கிய கடையை அவர் அடையாளம் காட்ட வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து, அந்த மாணவரை 3 நாள் காவலில் வைத்து சிபிஐ விசாரிக்க சிறார் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதே நேரத்தில் இந்தக் கொலையில் ஏற்கெனவே கைதான அசோக் குமாருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. கொலையுண்ட சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தடயமில்லை என்பதை சிபிஐ உறுதி செய்தது.
இதையடுத்து, சிபிஐ வேறு கோணத்தில் விசாரணை நடத்தியது. சம்பவத்தன்று பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதே பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர் உள்பட சந்தேகத்துக்கிடமான நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதுடன் அவர்களது செல்லிடப்பேசி அழைப்பு விவரங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதில், அந்த 11-ஆம் வகுப்பு மாணவர் மீதான சந்தேகம் உறுதியானது.
படிப்பில் ஆர்வமில்லாத அந்த மாணவன், பள்ளியில் நடைபெறவிருந்த தேர்வும், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பும் நடக்கக் கூடாது என்பதற்காக பள்ளியில் ஒரு கொலையை நடத்தத் திட்டமிட்டு, பிரதியுமனை கொலை செய்திருப்பதாக தெரிகிறது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.