/

காற்று மாசுபாடு: உ.பி. அரசு அதிகாரிகளுக்கு யோகி அறிவுறுத்தல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்

News image
உத்தரப் பிரதேச மாநிலரம் லக்னௌவில் அதிகரித்து வரும் மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மரங்களின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் போலீஸார்.
Updated On :16 நவம்பர் 2017, 7:48 pm

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். அவற்றில் குப்பைகளை எரிப்பதற்குத் தடை விதித்து வெளியிடப்பட்ட அறிவுறுத்தல் குறிப்பிடத்தக்கது.
மோசமான சுற்றுச்சூழல் காரணமாக வட மாநிலங்களில் நச்சு வாயு கலந்து காற்று மாசுபட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை காற்றில் புகையுடன் மணல், தூசி உள்ளிட்டவை கலந்திருப்பதால் அந்த மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் சாலைகளில் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் நேருகிறது என்பதும், நச்சுக் காற்றை சுவாசிக்கும்போது உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது என்பதும் மாநில மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இந்நிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருவதாகத் தெரிகிறது. அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அறிவுறுத்தல்கள் மாவட்ட நிர்வாகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குப்பைகளை எரிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, பயிர்க் கழிவுகளுக்கு விவசாயிகள் தீ வைப்பதைத் தடுக்க மாவட்டந்தோறும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. காற்றில் கலந்துள்ள தூசிகளை தண்ணீரைத் தெளித்துக் கட்டுப்படுத்துமாறும் முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.