மத்தியப் பிரதேசத்தில் காவலர் தேர்வுக்கு வந்தவர்களின் மார்பில் அவர்களது ஜாதிப் பிரிவை எழுதியதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சனிக்கிழமை போலீஸ் காவலர்கள் பணிக்கான உடல் தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
இதில், பங்கேற்றவர்களின் மார்பில் ஸ்கெட்ச் பேனாவால் அவர்களது ஜாதிப் பிரிவு எழுதப்பட்டது. எஸ்.சி., எஸ்.டி., ஜி (ஜெனரல்), ஓபிசி என மார்பில் எழுதப்பட்டவர்களின் புகைப்படம் செய்தித்தாள்களின் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக மாயாவதி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'காவல் பணிக்காக வந்தவர்களின் மேலாடை இல்லாத உடலில் அவர்களது ஜாதிப் பிரிவை மத்தியப் பிரதேச காவல் துறை அதிகாரிகள் எழுதியுள்ளனர். இது அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் முகத்திரையைக் கிழிப்பதாக உள்ளது.
எந்த அளவுக்கு ஜாதிய உணர்வு இருந்தால், அவர்கள் இவ்வாறு பகிரங்கமாக மார்பில் ஜாதியை எழுதி அவமானப்படுத்துவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதி மறுப்பை பற்றியும், அம்பேத்கர் பற்றியும் திடீர் புகழ்பாடும் பிரதமர் மோடி இந்த விஷயம் குறித்து கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?
காவலர் தேர்வுக்கு வந்தவர்கள் மார்பில் ஜாதி முத்திரையைப் பதிக்க காரணம் யார்? என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாதது ஏன்? இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், உடல் தகுதித் தேர்வில் வெவ்வேறு ஜாதிப் பிரிவுக்கு வெவ்வேறு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், எளிதில் அடையாளம் கண்டுகொள்வதற்காக தேர்வுக்கு வந்தவர்களின் மார்பில் ஜாதிப் பிரிவு எழுதப்பட்டதாக மத்தியப் பிரதேச மாநில காவல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.