ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டாலுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி கூடுதல் குற்றச்சாட்டை பதிவு செய்தார்.
இதுதொடர்பான வழக்கில் நவீன் ஜிண்டால், முன்னாள் மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் தாசரி நாரயண ராவ், முன்னாள் நிலக்கரித் துறை செயலர் ஹெச்.சி.குப்தா மற்றும் 11 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், தாசரி நாராயண் ராவ் காலமானதை அடுத்து அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. நவீன் ஜிண்டால் நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் கோயல், நிஹார் ஸ்டாக்ஸ் லிமிடெட் இயக்குநர் பிஎஸ்என் சூரியநாராயணன், மும்பை எஸ்ஸார் பவர் லிமிடெட் நிர்வாக துணைத் தலைவர் சுஷில் குமார் மாரூ ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ தாக்கல் செய்த துணை நிலை குற்றப்பத்திரிகையில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் மீதான புகாரை மறுக்கின்றனர். தங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நவீன் ஜிண்டாலுக்கு எதிராக கூடுதல் குற்றச்சாட்டை நீதிபதி பாரத் பராஸர் வியாழக்கிழமை பதிவு செய்தார்.