அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது குறித்து கவலைப்படத் தேவையில்லை; ரூபாயின் மதிப்பை பழைய நிலையை மீண்டும் எட்டும் என்று நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாள்களாக சரிந்து வருகிறது. இதனால், உள்நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. வியாழக்கிழமை ரூபாயின் மதிப்பு ஒரு கட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.70.32 என்ற அளவுக்கு சரிந்தது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியதாவது:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்த மதிப்பு 9.8 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது. எனவே, ரூபாய் தனது மதிப்பை மீண்டும் எட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இப்போதைய வீழ்ச்சியால் நாம் பெரிதும் கவலையடையத் தேவையில்லை. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் குறியீடு அல்ல.
நமது உள்நாட்டு உற்பத்தி சிறப்பாக உள்ளது. நமது நாட்டின் ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேளாண் பொருள்களின் உற்பத்தியும் சிறப்பாக உள்ளது. உள்நாட்டில் வேலைவாய்ப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக அதிகரிக்கும் அளவுக்கு நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
உணவு உற்பத்தியைப் பொறுத்தவரையில் நமது நாடு ஏற்கெனவே தன்னிறைவை எட்டிவிட்டது. உணவுப் பொருள் விநியோகக் கட்டமைப்பும் நமது நாட்டில் சிறப்பாகவே உள்ளது. அடுத்த கட்டமாக வேளாண் பொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதையே நாம் இலக்காகக் கொண்டு திட்டம் வகுத்து வருகிறோம் என்றார் அவர்.