
ஸ்டெர்லைட்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தை விசாரிக்க குழுவை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவை தேசிய பசுமை

புது தில்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தை விசாரிக்க குழுவை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அதன் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஏ.கே. கோயல், 'ஸ்டெர்லைட் விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஜே. வஜீஃப்தார் தனிப்பட்ட காரணங்களுக்கு விலகுவாதாகத் தெரிவித்த மின்னஞ்சல் நகல்களை இரு தரப்பினருக்கும் அளித்தார். மேலும், வேறு நீதிபதிகளின் பெயர்களை முன்மொழியுங்கள்'என்றார்.
இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, "ஸ்டெர்லைட் விவகாரத்தை விசாரிக்க மும்பை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மோகித் சர்மா அல்லது உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கே. பாலசுப்ரமணியன் ஆகியோரில் யாராவது ஒருவரை நியமிக்கலாம்' என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், 'தங்கள் தரப்பில் எந்தவொரு ஓய்வுபெற்ற நீதிபதியையும் முன்மொழிய விருப்பமில்லை' எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ஜுனன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பெனோ பென்சிகர், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி. சிவசுப்ரமணியம் அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்தரன் அல்லது சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. செல்வம் ஆகியோரது பெயர்களை முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல், 'ஸ்டெர்லைட் விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக நியமிப்பது தொடர்பாக இரு தரப்பினரும் முன்மொழிவை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். முன்மொழிவுகளை ஆராய்ந்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும்'என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



