
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட்: ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்
ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து

ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளை சுமந்தபடி விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்
ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை 4.10 மணிக்கு 2,250 கிலோ எடைகொண்ட ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ராக்கெட் பலத்த சப்தத்துடன் தீயைக் கக்கியபடி சீறிப்பாய்ந்தது.
மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருள் என்ஜின்களும், இரண்டாவது நிலையில் ஒரு திரவ எரிபொருள் என்ஜினும், மூன்றாவது நிலையில் அதிக திறன்கொண்ட கிரையோஜெனிக் என்ஜினும் பொருத்தப்பட்டிருந்தன.
ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்கள் 21 விநாடிகளில் அதில் இணைக்கப்பட்டிருந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு, திட்டமிட்டபடி பூமிக்கு அருகே 170 கிலோ மீட்டர் தூரத்திலும், பூமிக்கு தொலைவில் 33,190 கிலோ மீட்டர் தூரத்திலும் நீள்வட்டப் பாதையில் புவியை சுற்றிவரும் வகையில் தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
வாழ்த்துப் பரிமாற்றம்: ராக்கெட் ஒவ்வொரு நிலையைத் தாண்டும்போதும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர். செயற்கைக்கோள் திட்டமிட்ட தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டதும், விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
படிப்படியாக உயர்த்தப்படும்: நிலை
நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து செயற்கைக்கோளில் இடம்பெற்றிருக்கும் அப்போஜி திரவ என்ஜின் தரைக் கட்டுப்பாட்டு அறை மூலம் வியாழக்கிழமை (டிச.20) முதல் இயக்கப்பட்டு படிப்படியாக அடுத்த சில தினங்களில் செயற்கைக்கோள் உயர்த்தப்பட்டு, திட்டமிடப்பட்ட இறுதி புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். பின்னர் செயற்கைக்கோளில் உள்ள சூரியசக்தித் தகடுகள் விரிக்கப்பட்டு, இயக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டு, தகவல்கள் அனுப்பப்பட உள்ளன.
பயன் என்ன?: இந்த செயற்கைக்கோள் முழுவதும் இந்திய விமானப் படையின் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானப் படைக்குச் சொந்தமான அனைத்து தரவுகளும் தகவல்தொடர்பு மூலம் இணைக்கப்பட உள்ளன.
குறிப்பாக, விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள், விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திட்டம், ஆளில்லா விமானங்கள், தரைக் கட்டுப்பாட்டு அறை என விமானப் படைக்குச் சொந்தமான அனைத்தும் இந்த செயற்கைக்கோள் மூலம் தகவல்தொடர்பில் இணைக்கப்பட உள்ளன என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




