ஆயுதப்படை கிடங்கில் துப்பாக்கி வெடிப்பு: காவலர் பணியிடை நீக்கம்

சேலம் ஆயுதப்படை கிடங்கில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்த சம்பவம் தொடர்பாக, காவலர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
Updated on
1 min read

சேலம் ஆயுதப்படை கிடங்கில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்த சம்பவம் தொடர்பாக, காவலர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் மாவட்ட ஆயுதப் படை மைதானம் உள்ளது. இங்கு ஆயுதப் படை அலுவலகமும், காவல் துறையினர் பயன்பாட்டுக்கான அனைத்து வகை துப்பாக்கிகள் பாதுகாக்கும் மையமும் உள்ளன.
இதனிடையே, சேலம் மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாகச் செல்லும் ஆயுதப் படை காவலர்கள், தினந்தோறும் இங்கிருந்து தான் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது நடைமுறையாக உள்ளது.
இந் நிலையில், சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசி ஒருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்காக, ஆயுதப் படை காவலர் கேசவராஜ் மற்றும் பெண் காவலர் ஒருவர் திங்கள்கிழமை பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆயுதக் கிடங்கில் இருந்த பிளாட் ஆக்சன் என்ற ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கியை காவலர் கேசவராஜ் எடுத்து சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறியது. 
ஆயுதக் கிடங்குக்கு அருகில் உள்ள சுவற்றின் மேல் பகுதியில் தோட்டா பாய்ந்ததில், சுவற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. துப்பாக்கி மேல் நோக்கி இருந்ததால், அருகில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல் துறையினர் 
தெரிவித்தனர். 
தகவலறிந்த சேலம் சரக காவல் துறை துணை தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், துப்பாக்கியைக் கையாண்ட ஆயுதப்படை காவலரிடமும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பணியின் போது கவனக் குறைவாக இருந்ததாக காவலர் கேசவராஜை தாற்காலிக பணி நீக்கம் செய்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பி.ராஜன் உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com