மறைந்த முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பை காட்டிலும், பிரதமர் நரேந்திர மோடி கொடூரமானவர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டில் கடந்த 1975ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் மீதும், இந்திரா காந்தி குடும்பத்தினர் மீதும் பிரதமர் மோடி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்கட்சி இவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தில்லி சுல்தான் சர்வாதிகாரி' மோடி, ஒளரங்கசீப்பைக் காட்டிலும் கொடூரமானவர். அவர் தற்போது, 43 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை குறித்து, நாட்டுக்கு பாடம் நடத்துகிறார். இன்றைய ஒளரங்கசீப் (மோடியை தெரிவிக்கிறார்) நாட்டின் ஜனநாயகத்தை அடிமைப்படுத்தி வைத்துள்ளார். தனது சொந்தக் கட்சியான பாஜகவிலும் இதைத்தான் அவர் செய்துள்ளார்.
தனது தோல்விகளையும், மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தெரிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மூடிமறைப்பதற்காக, காங்கிரஸ் மீது அவர் குற்றஞ்சாட்டுகிறார். இதற்காக வரலாற்றுடன் அவர் விளையாடுகிறார். ஆனால், தாமும் விரைவில் வரலாறு ஆகப் போகிறோம் என்பதை அவர் மறந்து விட்டார்.
ஜனநாயகம் குறித்து தனக்கு காங்கிரஸ் பாடம் சொல்லி கொடுக்கத் தேவையில்லை என மோடி தெரிவித்துள்ளார். ஒளரங்கசீப் யாரிடம் இருந்தும் ஒருபோதும் பாடம் கற்றதில்லை. சர்வாதிகாரிகள் யாரிடமும் பாடங்களை கற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு வரலாறுதான், தக்க பாடங்களை கற்பிக்கும். மோடிக்கும் இதேநிலைதான் ஏற்படும்.
மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், இல்லையெனில் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்று மாநிலங்களை பிரதமர் மோடி மிரட்டுகிறார். நாட்டில் கடந்த 49 மாதங்களாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது. கடந்த 49 மாதங்களில், பிரதமர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்கள் என்பது தெரிய வந்துவிட்டன. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம், நாட்டுக்கு திருப்பி கொண்டு வரப்படவில்லை. மோடி அரசின் ஆட்சியின்கீழ் ஜனநாயகம் செத்து கொண்டிருக்கிறது.
நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அதில் இடையூறுகளை ஏற்படுத்தும் பணியில் மத்திய நிதியமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
43 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதற்கு ஜனதா கட்சியே காரணம் ஆகும். அக்கட்சியானது, வசதிப்படைத்தவர்களுக்கு ஆதரவாகவும், ஜமீன்தார்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டது. எனவே, ஏழைகள், தலித்துகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரின் நலன்களை பாதுகாக்கவே, அப்போது நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. ஜனசங்கம் அமைப்பால் அப்போதும், இப்போதும் பாதுகாக்கப்பட்ட பதுக்கல்காரர்கள், கருப்பு சந்தைக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மோடியின் வசதிப்படைத்தவர்களுக்கு ஆதரவான அரசும், பெருமுதலாளிகளை பாதுகாக்கிறது.
1975ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அரசு, வறுமைக்கு எதிரான போரை நடத்தியது. வங்கிகளை நலிவடைந்த மக்களும் பயன்படுத்தும் உரிமையை பெற்றுத் தந்தது. ஆனால் மோடி அரசின் ஆட்சியிலோ, எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படுகின்றனர். தங்களை எதிர்ப்போருக்கு கொலை, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுப்போரை மோடி பின்பற்றுகிறார். எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக, நாட்டில் ஒருவித அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார் சுர்ஜேவாலா.
நெருக்கடி நிலை குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியிருப்பதற்கு சுர்ஜேவாலா கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசியலமைப்புப் பதவிகளை வகிப்போரும், துரதிருஷ்டவசமாக மரியாதையையும், பாரம்பரியத்தையும் அழிக்கின்றனர். இதனால், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையே பாதிக்கப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி, கோயில், பேருந்து நிலையங்கள் அருகே மதுபானக் கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை
கரூர் சம்பவத்திற்குப் பின்... முதல்வராக சாலை வலம் செல்லும் விஜய்!

கரூரில் முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஜூலை 10 - நேரலை
கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan


