
பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு: இந்தியா, அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
இந்திய ராணுவத்துக்கு பாதுகாப்புத் துறை தொழில்நுட்பங்களை அமெரிக்கா வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது.

இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளிக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன
இந்திய ராணுவத்துக்கு பாதுகாப்புத் துறை தொழில்நுட்பங்களை அமெரிக்கா வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை (2+2), தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுபோன்றதொரு பேச்சுவார்த்தை நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில், பாதுகாப்புத் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவது, ஹெச் 1பி விசா விவகாரம், அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பது என பல முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையின் முடிவில், பாதுகாப்புத் துறைக்கான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் வலுப்படுத்தும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
பின்னர், இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையேயான முதல் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாட்டு தலைவர்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக இந்த பேச்சுவார்த்தை இருந்தது.
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், இரு நாட்டுத் தலைவர்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வசதியாக ஹாட்லைன் தொலைபேசி வசதியை ஏற்படுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வேகமாக வளர்ந்து வருவது, இரு தரப்பு உறவில் முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இதனால், புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும்; பொருளாதாரத் தொடர்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உற்பத்தித் துறை வளர்ச்சி அடையும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா, அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விவகாரத்தை ஐ.நா. சபை, சர்வதேச நிதிசார் செயல்திட்ட அமைப்பு போன்ற சர்வதேச அளவிலான அமைப்புகளிடம் கொண்டு செல்வதற்கு இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும், பாகிஸ்தானில் இருந்து அரங்கேற்றப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தங்கள் நாட்டு எல்லைக்குள் இருந்து பிற நாடுகளின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், கடந்த 2016-ஆம் ஆண்டில் உரி ராணுவத் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதே ஆண்டில் பதான்கோட் விமானப் படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினரை பயங்கரவாதிகளாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது, வரவேற்கத்தக்க முடிவாகும்.
மேலும், இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதில் இணைந்து செயல்படுவதாக இரு நாட்டுத் தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.
ஹெச் 1பி விசா விவகாரம்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிவதற்கான ஹெச் 1பி விசா அளிப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான நட்புறவால், அமெரிக்கா தங்களுக்கு பாதகமாக எந்த நடவடிக்கையும் என்று நம்பிக்கையில் இந்தியர்கள் இருக்கிறார்கள்.
எனவே, ஹெச் 1பி விசா சீர்திருத்தத்தில் நடுநிலையான முடிவை அமெரிக்கா எடுக்க வேண்டும்; இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மேலும் அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மைக் பாம்பியோவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன் என்றார் சுஷ்மா ஸ்வராஜ். பின்னர், இந்த சந்திப்பு தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



