
மம்தா சிகாகோ செல்ல அனுமதி மறுத்ததாக குற்றச்சாட்டு: உண்மையில்லை என வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு செல்வதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு செல்வதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன் 125-ஆவது ஆண்டையொட்டி அந்த நகரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உரையாற்றுவதற்காக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவரும் அதில் பங்கேற்பதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், அந்த நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர்.
இதனிடையே, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி அமெரிக்கா செல்ல வெளியுறவு அமைச்சகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், சிகாகோவில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மம்தா பானர்ஜி அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கோரி எந்தவொரு கோரிக்கையும் வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவில்லை. அவருக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை' என்றார்.
பாஜக-ஆர்எஸ்எஸ் மீது தாக்கு: இதனிடையே, மம்தா பானர்ஜி சிகாகோவில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய அதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாஜக-ஆர்எஸ்எஸ் அழுத்தம் கொடுத்ததாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமை தேசிய செய்தித் தொடர்பாளர் டெரக் ஓ பிரையன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது:
சிகாகோவில் உள்ள விவேகானந்தா வேதாந்தா சொஸைட்டி ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் பங்கேற்பதை மம்தா பானர்ஜி உறுதி செய்திருந்தார். இந்நிலையில், கடும் நெருக்கடி காரணமாக ஒருங்கிணைப்பாளர்கள் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததாகத் தெரியவந்துள்ளது.
மம்தா பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பே அழுத்தம் கொடுத்துள்ளன. ஏனெனில், அந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்ற உலக ஹிந்து மாநாடே சிகாகோவில் நடைபெறும் மிகப்பெரிய ஒரே நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பாஜக-ஆர்எஸ்எஸ் விரும்பின என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சிகாகோ நிகழ்வில் தாம் பங்கேற்க விரும்பியதாகவும், சிலரின் சதிச் செயல் காரணமாக தன்னால் அதில் பங்கேற்க முடியாமல் போனது தனக்கு வலியை ஏற்படுத்தியதாகவும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






