ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரஃபேல் போர் விமானக் கொள்முதல்  நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஃபேல் விமான கொள்முதல் நடவடிக்கை, விலை நிர்ணயம்,  அயலக கூட்டு நிறுவனத் தேர்வு ஆகிய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை.
ரஃபேல் விமான கொள்முதல் நடவடிக்கை, விலை நிர்ணயம், அயலக கூட்டு நிறுவனத் தேர்வு ஆகிய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல்  நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொள்முதல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வெள்ளிக்கிழமை வழங்கியது.
ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் வர்த்தக ரீதியாக தனிப்பட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிரான்ஸ் நாட்டின் "டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரூ.58,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆலோசிக்கப்பட்டதை விடவும் கூடுதல் விலைக்கு விமானங்கள் வாங்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. குறிப்பாக, ரஃபேல் விமான உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்துக்கு,  அனில் அம்பானியின் "ரிலையன்ஸ்' நிறுவனத்தை டஸால்ட் நிறுவனம் தேர்வு செய்ததில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், கொள்முதல் நடவடிக்கையில் சந்தேகம் இல்லை எனவும், எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் தனிப்பட்ட முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை மத்திய அரசு வரவேற்றுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு: முன்னதாக, ரஃபேல் விவகாரம் தொடர்பாக எம்.எல்.சர்மா என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் முதன்முதலில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து வழக்கு தொடுத்த வினீத் தாண்டா என்ற வழக்குரைஞர், முறைகேடு குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.
இதேபோன்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் செளரி மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு குறித்து வெவ்வேறு சமயங்களில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியபோது, மத்திய அரசு மற்றும் எதிர் மனுதாரர்களின் வாதங்களை கேட்டறிந்த பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தது.
தீர்ப்பு விவரம்: உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் சார்பில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ரஃபேல் வழக்கு குறித்த தீர்ப்பை வாசித்தார். அதன் விவரம்:
இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்களைப் போன்ற 4 மற்றும் 5-ஆம் தலைமுறை போர் விமானங்களை சேர்ப்பது அவசியமான தேவையாகும். எந்தவொரு நாடும் போர் விமானங்கள் இன்றி இருக்க முடியாது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 போர் விமானங்களை வாங்குவதற்காக கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவு தொடர்பாக உண்மையிலேயே சந்தேகம் கொள்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.  கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது, கொள்முதல் குறித்து யார் ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை.
ஆனால், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்ஸýவா ஹொலாந்த் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்தே ஒப்பந்தம் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவரது அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற ஆய்வை மேற்கொள்ள முடியாது.
ரஃபேல் விமான கொள்முதல் நடவடிக்கை, விலை நிர்ணயம், அயலக கூட்டு நிறுவனத் தேர்வு ஆகிய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை. 126 அல்லது 36 என எத்தனை விமானங்களை வாங்க வேண்டும் என்று மத்திய அரசை நிர்பந்திக்க முடியாது. அது அரசின் கொள்கை முடிவுகளை சார்ந்தது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜேபிசி விசாரணை இல்லை

தில்லியில் வெள்ளிக்கிழமை கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அருண் ஜேட்லி ஆகியோர் இது தொடர்பாகக் கூறுகையில், "தேசத்தின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திலும் அரசியல் ஆதாயம் பெறும் வகையில் காங்கிரஸ் கட்சி பொய்க்கதைகளை புனைந்தது இப்போது 
உச்சநீதிமன்றம் மூலம் வெளிப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை கிடையாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டதால் இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிட்டது என்றனர்.
"நாட்டின் மதிப்பை கெடுத்து விட்டார் ராகுல்': மக்களவை வெள்ளிக்கிழமை கூடியபோது, ரஃபேல் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டபடி இருந்தனர்.
கடும் அமளிக்கு இடையே, பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக ராகுல் காந்தி இந்த அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் ரீதியாக அவர் முன்னெடுத்த பொய் பிரசாரத்தால் சர்வதேச அளவில் நாட்டின் நன் மதிப்பு கெட்டுவிட்டது' என்றார்.

அன்றுமுதல் இன்றுவரை...


இந்திய விமானப் படைக்கு அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2002-ஆம் ஆண்டில், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இரண்டுமுறை அமைந்த காங்கிரஸ் அரசு, போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடம் வாங்குவதற்கான முயற்சியை முன்னெடுத்த நிலையில், ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறவில்லை. இந்நிலையில், தற்போதைய பாஜக அரசு கடந்த 2016-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்த முயற்சியை வெற்றிகரமாக்கியது. 
சுமார் ரூ.58,000 கோடி மதிப்பீட்டில் 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதன் பின்னர், மூத்த வழக்குரைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், ரஃபேல் விமான கொள்முதலில் சந்தேகம் இல்லை எனக் கூறி அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மற்றும் வழக்கின் விவரம்:
டிச.30, 2002: போர் விமானங்களை வாங்குவதற்கான கொள்முதல் நடைமுறைகளுக்கு பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்தது.
ஆக.28, 2007: விமானப் படைக்கு 126 அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டது.
மே 2011: இந்திய விமானப்படை தெரிவித்த விருப்பப் பட்டியலில் ரஃபேல் மற்றும் யுரோஃபைட்டர் விமானங்களின் பெயர்கள் இடம்பெற்றன.
ஜன.30,2012: ரஃபேல் போர் விமானங்களை குறைவான விலையில் தயாரித்து தருவதற்கான முன்மொழிவை பிரான்ஸ் நாட்டின் "டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனம் இந்திய அரசிடம் வழங்கியது.
மார்ச் 13, 2014: இந்திய பொதுத்துறை நிறுவனமான "ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' மற்றும் டஸால்ட் நிறுவனங்களுக்கு இடையே 108 விமானங்களுக்கான தயாரிப்பு பணிகளை முறையே 70:30 என பிரித்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
ஆக.8, 2014: பறக்கும் நிலையில் உள்ள 18 விமானங்களை அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பிரான்ஸ் வழங்கும் என்றும், அதன் பிறகு 108 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஏப்.10, 2015: பறக்கும் நிலையில் 36 விமானங்களை மட்டும் நேரடியாக வாங்குவது என ஒப்பந்த முன்வடிவம் மாற்றியமைக்கப்பட்டது.
ஜன.26, 2016: இந்தியா - பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
டிச.31, 2016: டஸால்ட் நிறுவனம் வெளியிட்ட ஆண்டறிக்கையில், இந்தியாவுக்கு ரூ.58,000 கோடி மதிப்பில் 36 போர் விமானங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது மத்திய அரசு கூறியிருந்த முந்தைய விலையை காட்டிலும் இருமடங்கு அதிகம் எனப் புகார் எழுந்தது.
செப்.5, 2018: ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
அக்.10: ரஃபேல் விமான கொள்முதலுக்கான கொள்கை முடிவு குறித்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யுமாறு 
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்.24: முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, 
அருண் செளரி, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் 
உள்ளிட்டோர், சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர்.
அக்.31: ரஃபேல் போர் விமான விலை குறித்த விவரங்களை 
10 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நவ.12: விலை விவரம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நவ.14: வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
டிச.14:  ரஃபேல் விமான கொள்முதலில் சந்தேகம் இல்லை எனக் கூறி அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com