எதிர்வரும் ஆண்டுகளில் மூன்று லட்சம் பேர் ஆள்குறைப்பா?: ரயில்வே விளக்கம் 

எதிர்வரும் ஆண்டுகளில் மூன்று லட்சம் பேர் ஆள்குறைப்பு மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளார்கள் என்ற தகவலுக்கு ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
எதிர்வரும் ஆண்டுகளில் மூன்று லட்சம் பேர் ஆள்குறைப்பா?: ரயில்வே விளக்கம் 

புது தில்லி: எதிர்வரும் ஆண்டுகளில் மூன்று லட்சம் பேர் ஆள்குறைப்பு மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளார்கள் என்ற தகவலுக்கு ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

மோடி தலையிலான பாஜக அரசு இரண்டாம் முறையாக பதவியேற்ற உடன் வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகளில் திறமைக் குறைவான உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து அதிரடி  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதே போன்ற நடைமுறையானது ரயில்வே துறையிலும் பின்பற்றபட உள்ளதாக அரசு வட்டாரங்களில் தகவல் வெளியாகியது.

அதன்படி ‘கட்டாய ஓய்வு’ என்ற பெயரில் ரயில்வே ஊழியர்களில் கணிசமானோரை ஆள்குறைப்பு செய்ய உள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் ரயில்வேயில் 3 லட்சம் ஊழியர்களுக்கு அதுபோல கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதன்மூலம் தற்போது 13 லட்சமாக உள்ள ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக குறையும் என்றும் மதிப்பிடப்பட்டது. 

அத்துடன் ரயில்வே ஊழியர்களில் 55 வயதை கடந்தவர்களையும், 30 வருடம் பணி முடித்தவர்களையும் அடையாளம் காணுமாறும், பணிநடத்தை விதிகளின்படி, ஊழியர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்குமாறும், ரயில்வே மண்டலங்களுக்கும், ரயில்வே உற்பத்தி கூடங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரிய வந்தது.

தற்போது அதற்கு விளக்கமளிக்கும் வகையில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2014 முதல் 2019–ம் ஆண்டுவரை, ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 262 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 83 ஆயிரத்து 637 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 60 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதுதொடர்பான இதர பணிகள் 2 மாதங்களில் முடிவடையும்.

ரயில்வே மண்டலங்களுக்கும், ரயில்வே உற்பத்தி கூடங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது வழக்கமான நடவடிக்கைதான். இவை ஊழியர்களுக்கான சட்டங்கள் வகுத்த விதிமுறை ஆகும். பொதுநலன் கருதி இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுகளிலும் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து ரயில்வேயில் ஆள்குறைப்பு செய்யும் திட்டம் உள்ளதாக வெளியான தகவல், அடிப்படை ஆதாரமற்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com