மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முடிந்ததா அயோத்தி வழக்கு?

சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், கண்டிப்பாக இந்த வழக்கின் விசாரணை தொடர வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

News image
Updated On :9 நவம்பர் 2019, 10:03 am

DIN

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட்டது. 

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Story image

பல நூறு ஆண்டுகளாக இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே இருந்துவந்த நீண்ட பிரச்னை, இந்தத் தீர்ப்பின் மூலமாக ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நீதித்துறையின் இந்த முடிவை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆதரித்தே கருத்து தெரிவித்து வருகின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் மக்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

'ராம் பக்தியோ, ரஹீம் பக்தியோ, தேச பக்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

2010ல் அலகாபாத் நீதிமன்றம், நிலத்தை மூன்றாக பிரித்ததே தவறு என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தற்போது, அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்விடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

அதேபோன்று, இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு வக்பு போர்டு ஏற்கும் இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Story image


நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பாதுகாப்பு கருதியும், வசதி கருதியும் நேற்று இரவு தீர்ப்பு நேரம் அறிவிக்கப்பட்டு இன்று காலை தீர்ப்பு முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாகவே, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாக நாடே எதிர்பார்த்து காத்திருந்த இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் சாதாரணமாக மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தியா 'வேற்றுமையில் ஒற்றுமை' கொண்ட நாடு என்பதை இந்த இடத்தில் மீண்டும் நாம் நிரூபித்திருக்கிறோம். தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டாலும், சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளது. 

Story image

உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் படித்த பின்னர், தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சன்னி வக்பு வாரியம் கூறியுள்ளது.

அவ்வாறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், கண்டிப்பாக இந்த வழக்கின் விசாரணை தொடர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தீர்ப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், தீர்ப்பினை அமல்படுத்த கால தாமதம் ஆகலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். 

எடுத்துக்காட்டாக, சபரிமலை வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய போதும், அந்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு விசாரணையில் இருந்து வருகிறது.

Story image

சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு மேல் ஆன நிலையிலும், தீர்ப்பு செயல்படுத்தப்படவில்லை. இதுபோன்று நீதிமன்றத்தில் பல வழக்குகள் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையிலும், ஒரு சில காரணங்களால் அமல்படுத்தப்படாமல் உள்ளன. இதேபோன்று அயோத்தி வழக்கின் தீர்ப்பும் செயல்படுத்த சிறிது காலம் ஆகலாம் என்றே கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.