நான் உரிய மரியாதையுடன் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும்: மருத்துவர் கஃபீல் கான்

கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டுள்ள மருத்துவர் கஃபீல் கான், உரிய மரியாதையுடன் தான் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
தில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கும் மருத்துவர் கஃபீல் கான்
தில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கும் மருத்துவர் கஃபீல் கான்
Published on
Updated on
1 min read


கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டுள்ள மருத்துவர் கஃபீல் கான், உரிய மரியாதையுடன் தான் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவமனையில், 2017-இல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி இரவு சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்தனர். அடுத்த சில நாட்களில் மேலும் 34 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆகஸ்ட் 10 இரவு அன்று உயிரிழந்த குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கும் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமல் மருத்துவமனை நிர்வாகம் பாக்கி வைத்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே, ஆக்ஸிஜன் சிலிண்டரை விநியோகிக்க அந்த நிறுவனம் மறுத்துள்ளது. 

ஆனால், உத்தரப் பிரதேச அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டது. 

இந்த விவகாரத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் கஃபீல் கான், கவனக்குறைவாக செயல்பட்டதாகவும், ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு பிறகு கைதும் செய்யப்பட்டார். அதேசமயம், அவர் பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார். 

இதையடுத்து இதுதொடர்பாக உத்தரப் பிரதேச அரசு அமைத்த விசாரணைக் குழு, இந்த சம்பவத்துக்கும் கஃபீல் கானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி அவரை இந்த விவகாரத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், மருத்துவர் கஃபீல் கான் இன்று (சனிக்கிழமை) தில்லியில் இந்திய பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரிடம் உத்தரப் பிரதேச அரசு மன்னிப்புக் கேட்டு, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நான் ஊழலில் ஈடுபடவில்லை என்பதும் மருத்துவத்தில் கவனக் குறைவாக செயல்படவில்லை என்பதும் துறை ரீதியான விசாரணையில் தெளிவாகிவிட்டது. 'கொலைகாரன் கஃபீல்' மற்றும் 'தவறான மருத்துவர்' என்ற அவப்பெயர்கள் தற்போது என் தலை மீது இல்லை. 

இதனால், நான் உரிய மரியாதையுடன் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.

அதேசமயம், கஃபீல் கானின் பணியிடைநீக்கம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை. 

முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோதி ஆதித்யநாத் ஆலோசகர் மிருத்யுன்ஜய் குமார் இதுகுறித்து வெள்ளிக்கிழமை தெரிவிக்கையில், 

"துறை ரீதியான விசாரணை மூலம், மருத்துவர் கஃபீல் கான் குற்றமற்றவர் என்று கூறுவது சரியாக இருக்காது. அந்த அறிக்கையின் மூலம் அவர் தவறான ஒரு முடிவுக்கு வந்துள்ளார்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com