தெலங்கானா என்கவுன்டர் நடந்தது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்
தெலங்கானா என்கவுன்டர் நடந்தது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்
தெலங்கானா என்கவுன்டர் நடந்தது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்


ஹைதராபாத்: தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.

சம்பவம் நடந்த இடத்திலேயே தற்போது வரை குற்றம்சாட்டப்பட்டவர்களின் உடல்கள் இருக்கும் நிலையில், அங்கேயே செய்தியாளர்களை சந்தித்து, நடந்தது என்ன என்பது குறித்து காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது, பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சென்ன கேசவலு, முகமது ஆரிஃப் உள்ளிட்ட 4 பேரையும் டிசம்பர் 3ம் தேதி முதல் 10 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்களை சேகரித்து வந்தோம். பலாத்காரம் மற்றும் கொலையைச் செய்ததை நான்கு பேருமே ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட உடைமைகளை அவர்கள் மறைத்து வைத்திருந்ததாகக் கூறினர். அதைக் காட்டுவதாகக் கூறியதால், சம்பவ இடத்துக்கு அழைத்து வருவது அவசியமாகிறது.

மேலும், இன்று அதிகாலை, நான்கு பேரையும், சம்பவ இடத்தில் குற்றத்தை எப்படி செய்தார்கள் என்று நடித்துக் காட்டவும் அழைத்து வந்தோம். அப்போது திடீரென சென்னகேசவலு, முகமது ஆரிஃப் ஆகியோர் எங்களது கையில் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி எங்களை நோக்கி சுடத் தொடங்கினர். முகமது ஆரிஃப்தான் எங்களை நோக்கி சுட்டான். 

ஒரு கட்டத்தில் போலீஸார் மீது நான்கு பேரும் சேர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  இதில் எஸ்.ஐ. வெங்கடேஷ் உள்ளிட்ட இரண்டு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர்.

இதனால், நான்கு பேரையும் என்கவுன்டர் செய்தோம். சுமார் 15 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் என்கவுன்டர் நடந்தது என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.

பகலில் ஏன் அழைத்து வரவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பகலில் அழைத்து வந்தால், பாதுகாப்புக் குறைபாடு ஏற்படும் என்றுதான் அதிகாலையில் அழைத்து வந்தோம். குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் சென்ற போதே அவர்களைத் தாக்க பொதுமக்கள் முயற்சித்ததால் தான் அதிகாலையில் அவர்களை வெளியே அழைத்து வந்தோம் என்று ஆணையர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com