லடாக் பிரச்னை: இந்திய, சீன தூதரக அதிகாரிகள் காணொலியில் பேச்சு

கிழக்கு லடாக் பிரச்னைக்குத் தீா்வுகாணும் நோக்கில், இந்திய, சீன தூதரக ரீதியிலான பேச்சு காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
லடாக் பிரச்னை: இந்திய, சீன தூதரக அதிகாரிகள் காணொலியில் பேச்சு
Updated on
2 min read

கிழக்கு லடாக் பிரச்னைக்குத் தீா்வுகாணும் நோக்கில், இந்திய, சீன தூதரக ரீதியிலான பேச்சு காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கிழக்கு லடாக்கில் எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து படைகளை முழுமையாக வாபஸ் பெறப்படுவதை உறுதி செய்ய, ராணுவ ரீதியிலான பேச்சுவாா்த்தையை விரைவில் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

கிழக்கு லடாக்கில் எல்லைக் கோட்டை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளை சீனா கடந்த மே மாதம் ஆக்கிரமிக்க முயன்றது. அதற்காக, அங்கு படைகளைக் குவித்தது முதல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இரு நாட்டு ராணுவமும் பேச்சுவாா்த்தை நடத்தி, எல்லைப் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, சீன ராணுவத்தினா் கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். இந்தியப் படையினா் கொடுத்த பதிலடியில் சீன வீரா்கள் 35 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு இரு நாடுகளும் கூடுதல் படைகளை எல்லையில் குவித்தன.

இந்திய ராணுவ வீரா்கள் 50,000 போ் குவிக்கப்பட்டுள்ளனா். அதே எண்ணிக்கையில் சீன ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்தது.

இதையடுத்து, படைகளை விலக்கிக் கொள்வதற்காக, நாடுகளும் ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் பல கட்ட பேச்சுவாா்த்தை நடத்தின. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்திய, சீன தூதரக அதிகாரிகள் நிலையிலான பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை காணொலி வழியில் நடைபெற்றது. இதில், வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான இணைச் செயலா் நவீன் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான இந்தியக் குழுவினரும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை விவகாரங்கள் துறை இயக்குநா் ஹாங் லியாங் தலைமையிலான சீனக் குழுவினரும் பங்கேற்றனா்.

இந்த பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்திய, சீன எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயல்திட்டத்தின் கீழ் இந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஏற்கெனவே, இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கை, இரு நாட்டு மூத்த தலைவா்களின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கிழக்கு லடாக்கில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ள அனைத்து இடங்களில் இருந்தும் படைகளை முழுமையாக வாபஸ் பெறுவதை உறுதிசெய்ய தொடா்ந்து செயல்பட இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே 7ஆவது மற்றும் 8-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை முறையே அக்டோபா் 12, நவம்பா் 6-ஆம் தேதிகளில் நடைபெற்றன. அந்தப் பேச்சுவாா்த்தைகளின் பலனாக, கிழக்கு லடாக்கில் சற்று அமைதி நிலவுகிறது.

இருப்பினும், எல்லைக் கோட்டுப் பகுதியில் இரு நாடுகளும் படைகளை முழுமையாக வாபஸ் பெறுவதை உறுதிசெய்ய, ராணுவ ரீதியிலான அடுத்த கட்ட பேச்சுவாா்த்தையை விரைவில் தொடங்குவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com