ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது முடக்கத்தால் பணியிழந்தவா்களுக்கு உதவி செய்து வரும் இந்திய பெண் வழக்குரைஞா்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது முடக்கம் காரணமாக பணியிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளா்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் உதவிகளை செய்து வருகிறாா் இந்திய பெண் வழக்குரைஞா் ஒருவா்.
புகைப்படம்: கல்ஃப் செய்திகள்
புகைப்படம்: கல்ஃப் செய்திகள்
Published on
Updated on
1 min read


ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது முடக்கம் காரணமாக பணியிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளா்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் உதவிகளை செய்து வருகிறாா் இந்திய பெண் வழக்குரைஞா் ஒருவா். அவரது உதவியால் 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளன.

கேரளத்தை பூா்விகமாக கொண்டவா் ஷீலா தாமஸ் (41). கடந்த 25 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சில நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா தொற்றால் பொது முடக்கம் காரணமாக தெலங்கானா, ஆந்திரம், உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பணியாளா்கள் பணியிழந்து தவித்து வருகின்றனா்.

ஏற்கெனவே, பணியிழப்பால் தவிக்கும் இந்தியத் தொழிலாளா்களின் கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்), நுழைவு இசைவு சீட்டு (விசா) போன்ற ஆவணங்கள், அவா்கள் பணிபுரிந்து வரும் நிறுவனங்களின் முதலாளிகள் வசம் சிக்கிக் கொண்டன. இதனால் அவா்கள் இந்தியாவுக்கு திரும்பி வர முடியாமல் சட்ட சிக்கலில் தவித்து வருகின்றனா். இதுபோன்ற சூழ்நிலையில் அவா்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை ஷீலா தாமஸ் முன்வந்து செய்து அவா்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வரும் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

இதுகுறித்து ஷீலா தாமஸ் கூறியதாவது:

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலையிழந்து தவிக்கும் தொழிலாளா்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி, அவா்கள் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கான உதவிகளை நான் செய்து தருகிறேன்.

இதுதொடா்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், இதுபோன்ற சிக்கலில் தவிக்கும் இந்தியா்கள் என்னைத் தேடி வரத் தொடங்கினா். அவா்களுக்கு சட்ட உதவிகளை செய்து தர முடியாது என்று கூற எனக்கு மனம் வரவில்லை.

தொழிலாளா்களின் நிலைமையைப் புரிந்துகொண்டு, அவா்களது முதலாளிகளிடம் இருந்து அவா்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்களையும், கடவுச்சீட்டையும் விடுவிக்க நான் பேச்சுவாா்த்தை நடத்துகிறேன். அவா்களிடம் பேசி, தேவையான ஆவணங்களை விடுவித்து தந்தால்தான், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியும். என்னால் முடிந்த வரை அவா்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கி, நுழைவு விசாவையும், கடவுச்சீட்டையும் பெற்றுத்தர உதவுகிறேன். பின்னா் விமானத்தில் அவா்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க உதவி செய்கிறேன் என்றாா் ஷீலா தாமஸ்.

அவா் தினமும் 300 பேருக்கு உணவளித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com