

தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் மக்கள் ஊரடங்கு நாளை (திங்கள்கிழமை) காலை வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிரமும் மக்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில்,
"மக்கள் ஊரடங்கை நாளை காலை வரை தொடருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் மும்பையில் தரையிறங்க அனுமதிக்கப்படாது.
மகாராஷ்டிர அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சதவீதத்தை 25-இல் இருந்து 5 ஆக குறைத்துள்ளோம். அத்தியாவசியக் கடமைகளை ஆற்றும் மக்கள் மட்டுமே மார்ச் 31 வரை பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் மிக முக்கியமான கட்டத்தை மகாராஷ்டிரம் அடைந்துள்ளது. எனவே, அனைவரும் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்துகிறேன். மகாராஷ்டிரத்தில் நகரங்களுக்கு இடையிலான பேருந்து சேவையும் மார்ச் 31-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளான வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் உள்ளிட்டவை இயங்கும். அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக மும்பையில், பேருந்துகள் இயக்கப்படும்" என்றார்.
இதேபோல், உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.