
முகக்கவசம், சானிடைசர் அதிக விலைக்கு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தற்போது 341 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக இன்று ஒருநாள் 'மக்கள் ஊரடங்கு' கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், கரோனா பாதிப்பை தடுக்க பயன்படுத்தப்பட்டு வரும் முகக்கவசம், சானிடைசர்கள் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், முகக்கவசம், சானிடைசர் அதிக விலைக்கு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.