வேளாண் சட்டங்களுக்கும், எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை: ரிலையன்ஸ் விளக்கம்

புதிய வேளாண் சட்டங்களுக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தகவல் தொடர்பு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

சமூக விரோதிகளால் எங்களது தொலைத்தொடர்பு கோபுரங்கள் சட்ட விரோதமாக சேதப்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். தற்போது, நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த சட்டங்களால் ரிலையன்ஸ் நிறுவனம் எவ்வித ஆதாயமும் அடையப் போவதில்லை.  

இந்த சட்டங்களுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புபடுத்துவது எங்களது வர்த்தகத்துக்கும், நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். நாங்கள் ஒப்பந்த வேளாண்மையில் ஈடுபட போவதில்லை. அதற்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலம் மட்டுமல்ல நாடு முழுவதும் எந்தப் பகுதியிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாய நிலங்களை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவில்லை.  

எங்களது சில்லறை விற்பனைக் கடைகளில் நாள்தோறும் விற்பனை செய்யப்படும் உணவு தானியங்கள், உணவுப் பொருள்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதில்லை.

ரிலையன்ஸ் நிறுவனம் விதிகளுக்குப் புறம்பாகப் பயனடைய எந்த விவசாயிடமும் நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை. அதேபோல, எங்களது விநியோகஸ்தர்களும் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் கொள்முதல் செய்வதில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒருபோதும் ஈடுபடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com