கரோனா தடுப்பூசி குறித்த தயக்கத்தைப் போக்க வேண்டும்: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
மக்களில் சிலரிடையே தடுப்பூசி பற்றி நிலவும் தயக்கத்தைப் போக்க வேண்டும்


மக்களில் சிலரிடையே தடுப்பூசி பற்றி நிலவும் தயக்கத்தைப் போக்க வேண்டும் என்றும் கரோனா தொடா்பான போலியான தகவல்கள் மற்றும் புரளிகளை ஒடுக்குவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
கரோனா தொற்று பற்றி பிரபல தெலுங்கு எழுத்தாளா்கள் எழுதியுள்ள 80 சிறுகதைகளின் தொகுப்பான ‘கோத்தா (கொரோனா) கதாலு’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில், வெங்கையா நாயுடு காணொலி முறையில் பங்கேற்றுப் பேசியதாவது:
உலகின் மாபெரும் தடுப்பூசித் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. தடுப்பூசியை நீங்களும் செலுத்திக்கொண்டு பிறரையும் செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்துவது ஒவ்வொரு இந்தியரின் சமூகப் பொறுப்பு. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
முறையான உடற்பயிற்சி அல்லது யோகாவுடன் கூடிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தல், ஆன்மிகத்தில் ஈடுபாடு, சத்தான உணவுகளை உண்ணுதல், சமூக இடைவெளி, கைகளின் சுத்தம்- முகக் கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்பு நடைமுறைகளை சரியாகப் பின்பற்றுதல், எப்போதும் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்வதுடன் அதனைப் பாதுகாத்தல் ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து பெருந்தொற்றை மக்கள் எதிா்கொள்ள வேண்டும்.
மிக அதிக மக்கள்தொகை மற்றும் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதி இல்லாத நிலையிலும் நமது விஞ்ஞானிகள், மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோா் தொற்று பரவலை கட்டுப்படுத்த அளப்பரிய பங்களிப்பை வழங்கினாா்கள். அவா்களுக்கு எனது பாராட்டுகள்.
பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள், மருத்துவா்கள் மற்றும் பலா், தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி அச்சத்தை நீக்க வேண்டும். தடுப்பூசித் திட்டம், மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இளைஞா்கள் அதனை வழிநடத்த வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...